இலங்கைக்கு இந்தியா எதுவித இராணுவ உதவியும் வழங்கவில்லை : சுரேஷ் மேத்தா
“இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆயுதம் வழங்குவதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு” என இந்திய கடற்படை அதிகாரி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் நடந்த விழாவில் சுரேஷ் மேத்தா கலந்து கொண்டு, ‘ஐஎன்எஸ் பருந்து ‘என்ற கப்பலை, கடற்படைக்கு அர்ப்பணம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன், இந்தியா அதிக அளவில் வாணிப தொடர்பை கொண்டுள்ளது. இதனால் வங்க கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து வருகிறோம். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்குக் கடல் பாதுகாப்பு முக்கியமானது. ‘ஐஎன்எஸ் பருந்து’ கிழக்கு கடலோர பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும்.
இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு உதவுவதாகச் சில தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு. அதற்கு எவரும் உதவ முடியாது. அதே சமயத்தில் இலங்கை இராணுவத்துக்கும் நாம் எந்த ஆயுதமும் வழங்கவில்லை” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply