07 தமிழரையும் பொங்கலன்று விடுவிக்கவும்: ம.தி.மு.க தீர்மானம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, கால் நூற்றாண்டுகாலமாக சிறையில் வாடும் 7 தமிழரையும், இவ்வருடப் பொங்கலன்று விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தீர்மொன்றை நிறைவேற்றியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அரசு தீர்மானமொன்றை நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், திருச்சியில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சிறையில் கால்நூற்றாண்டு காலமாக அடைக்கப்பட்டு இருக்கின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இம்மூவரும் தாக்கல் செய்த வழக்கு 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மூவரின் தூக்குத் தண்டனையையும் நீதிமன்றம் இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. எனினும், காங்கிரஸ் கூட்டணி அரசு, மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அறுவரடங்கிய அமர்வு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை இரத்து செய்தது சரியே என்று 2015ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதியன்று தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்புக்கு முன்பு அதாவது 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதியன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடிய தமிழக அமைச்சரவை, பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி, ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளை மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் மாநில அரசு விடுதலை செய்ய முடியும். எனவே, இந்த 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதியன்று தீர்ப்பளித்தது. ஆனால், அதேநேரம் தண்டனை குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்கு இந்திய அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கு வழங்கியிருக்கும் அதே அதிகாரம் அரசியல் சட்டப்பிரிவு 161ன் படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையின்படியே குடியரசுத் தலைவரும், ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல் அறிவித்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அரசியல் சட்டப்பிரிவின் பிரகாரம் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்படப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply