பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு திருட்டு

sangariநீண்ட காலமாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் கடந்த தேர்தலில் தனது வாக்குச்சீட்டுக்கள் திருடப்பட்டமைக்கு தன்னிடம் போதிய ஆதாரம் உண்டென குற்றஞ் சுமத்தியுள்ளார். இக்கட்சி வடக்கு மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சியுமாகும். தேர்தல்களில் வெற்றி தோல்வி சகஜம். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிப்பு முடிந்தவுடன் அதேயிடத்தில் வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்படுவதால் அவற்றை திருடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு முடிந்ததும் வாக்குச்சீட்டுப் பெட்டிகள் வேறு இரண்டொரு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அங்கும் வாக்குச்சீட்டு களவு போவதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் சிலர் புத்திசாலித்தனமாக செயற்பட்டு வாக்குச்சீட்டை வெற்றிகரமாக திருடிவிடுகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் தேர்தல்களில் நடந்தாலும் மிகக் குறைந்த அல்லது எதுவித ஆட்சேபனையும் இல்லாமல் நடந்தேறி விடுகிறது. எனினும் சில பாதிக்கப்பட்டவர்கள் உரிய காலத்துக்குள் பரிகாரம் தேடி நீதிமன்றத்துக்கு செல்கின்றனர். கடந்த காலத்தில் வாக்குச்சீட்டுப் பெட்டிகளில் குளறுபடிகள் ஏற்படுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன் ரயின் என்ற ஸ்தாபனம் சார்பில் தேர்தலில் தோல்வியுற்ற தேஜா குணவர்தனா என்ற அம்மையார் தனது வாக்குச்சீட்டுக்கள் தபால் பெட்டிகளில் காணப்பட்டதாக குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அதில் தோல்வியும் கண்டார். எது எப்படியிருப்பினும் இதுவொரு படுமோசமான செயல். ஆதலால் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட வேண்டும். ஆனால் காலம் கடந்தமையால் தேர்தல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாதபடியினால் வேறு ஏதாவது சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படல் வேண்டும். எது விதத்திலும் இத்தகைய குற்றங்கள் இடம்பெறாது தடுக்கப்படல் வேண்டும்.

இந்தியாவில் வாக்களிப்பு மின்னிணைப்பு இயந்திரம் மூலம் நடைபெறுவதால் இத்தகைய வாக்குத்திருட்டுக்கள் இடம்பெற வாய்ப்பில்லை. இதேமுறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த தற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கருஜயசூரிய அவர்கள் முன்பு மிகவும் பிரயாசப்பட்டு இந்திய அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் இன்று ஏன் இந்த விடயத்தில் அவர் பாராமுகமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் மீண்டும் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு அடுத்த உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்தியா போன்ற மின்னிணைப்பு மூலம் வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன். திருட்டு வாக்குகள் மூலம் வெற்றிப்பெற்ற ஒருவர் தோல்வியடைந்தவரை பார்த்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என ஏளனம் செய்வது மிகக்கொடுமையான செயலாகும். அண்மையில் ஒரு முக்கிய பேர்வழி சில தோல்வியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்”; என ஏளனம் செய்தது, அதேபோன்று தற்போது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற ஒருவர் தன்மீதும் இத்தகையவொரு வசைபாடப்படுகிறது எனத் தெரிந்தும் இதேபோன்று தோல்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஏளனம் செய்தமையை அநேகர் அறிந்தவையாகும்
ஒரு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கப்பட்டமை அதிர்ச்சியை கொடுத்தது. அடிக்கடி இதேபோன்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என தேவையற்று ஏளனம் செய்யப்பட்டேன். ஆனால் உண்மையில் பலாத்காரம் மூலம் எனது வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யவோ, சொந்த வாக்குகளை அளிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கிய இலங்கையில் இன்று ஜனநாயகம் வலுவிழந்து வருகிறது. படுதோல்வியடைந்து அதிர்ச்சியை கொடுத்த அதே கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பாராளுமன்றத்தின் காலஎல்லையை ஆறு ஆண்டுகளுக்கு பொதுஜன வாக்கெடுப்பு மூலம் நீட்டித்தமையை ஆட்சேபித்து தனது 18 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இராஜினாமா செய்யவைத்து நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவியதோடு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஜனநாயகம் மீண்டும் செழிப்புற ஓங்கி வளர உதவுவோமாக.

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் -த.வி.கூ

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply