இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தாய்லாந்தில் இடமளியோம் அமைச்சர் போகொல்லாகமவிடம் தாய்: பிரதமர்

இலங்கையின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது நாட்டில் இடமளிக்கப்படமாட்டாது என தாய்லாந்தின் பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவா வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று தாய்லாந்துப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே தாய்லாந்துப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமது முழு விருப்பமாகும் எனக் குறிப்பிட்ட தாய்லாந்துப் பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

தமது பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசணையோடு இருப்பது குறித்தும் அவர் இலங்கை அரசுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, புலிகள் அமைப்பில் எஞ்;சியிருக்கும் ஒருசிலர் புதிய இடங்களில் தங்களை மீள் கட்டமைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்ற அதேவேளை ஏனைய பயங்கரவாதக் குழுக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி பயங்கரவாதம் தொடர்பான தங்களது அனுபவங்களையும் நிபுணத்துவங்களையும் பரிமாறிக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை தமது நாட்டு அதிகாரிகளுக்கு வழங்குமாறு தாய்லாந்துப் பிரதமர் அமைச்சர் போகொல்லாகமவிடம் கோரிக்கை விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply