வடக்கில் இராணுவ வசமுள்ள 4600 ஏக்கர் காணிகளை விடுவிக்க இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை : ரணில்
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 4600 ஏக்கர் காணிகளையும், கிழக்கின் சில பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளையும் இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாவது, “தைப்பொங்கல் என்பது ஒரு தேசிய பண்டிகை, அது தமிழ் மக்களுக்கோ அல்லது யாழ்ப்பாண மக்களுக்கோ தனியே இந்து மக்களுக்கோ மட்டும் உரித்தான ஒரு பண்டிகையல்ல. நாம் எந்த மதமாக இருந்தாலும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் வழக்கம் உள்ளது. இதில் இரண்டு பண்டிகைகள் உள்ளன. ஒன்று அறுவடை விழா, மற்றையது பொங்கல் விழா. தெற்கு மக்களும் தமது அறுவடையை தலதா மாளிகைக்கு கொண்டு சென்று பூசை செய்வது நடைபெறும்.
இந்த வகையில் தமிழ் இந்து மக்கள் பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவமளித்து வருகிறார்கள். பௌத்தர்களைப் பொறுத்தவரை அவர்கள் சித்திரைப் புத்தாண்டுக்கு முக்கியத்துவமளிப்பர். இதற்கிணங்கவே தைப்பொங்கல் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் தேசிய விழாவாக நடத்த நாம் தீர்மானித்தோம். பூகோள சூழல் மாற்றம் ஏற்படுவது போன்றே இப்போது பூகோள அரசியல் மாற்றமும் இடம்பெற்று வருகிறது. இலங்கையில் அத்தகைய மாற்றம் கடந்த வருடம் ஏற்பட்டது.
சூரிய பகவானின் கடாட்சம் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. இப்போது அனைவருக்கும் ஒளி கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்த முடிந்துள்ளன. தவிர்க்க முடியாத காரணத்தினால் வடக்கு மக்களை சந்திக்க இன்று அவரால் வர முடியாமற்போனது. எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உங்களை சந்திக்க வந்துள்ளார்.
இருளில் இருந்த மக்கள் ஏணியைப் பெற்றுள்ள போதும் அவர்களிடம் பொறுமை இல்லாதுள்ளது. அரசியல், சமூக மற்றும் அபிவிருத்தியிலும் காணப்பட்ட இருள் நீக்கப்பட்டுள்ளதை மக்கள் உணர வேண்டும். எனினும் பொறுமை அவசியம். மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிக வலி உள்ளதென்பது எமக்கு தெரியும். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இது தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரன் தமதுரையில் குறிப்பிட்டார்.
யுத்தம் இடம்பெற்ற இருளான காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் இலங்கைக்கு வந்து சென்றார். தற்போது ஒளி நிலவும் சூழ்நிலையில் பிரிட்டிஷ் இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் கண்டுணர்கிறார். மக்களுக்கு சொந்தமான 4,600 ஏக்கர் காணி வடக்கிலும் மேலும் காணிகள் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் படையினர் வசம் உள்ளன.
இவற்றை மக்கள் தேவை மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு மாதங்களில் இது தொடர்பில் முடிவு எட்டப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதகாலத்திற்குள் ஒரு தீர்மானத்திற்கு வருவர். இது தொடர்பான அறிக்கையையும் நான் கோரியுள்ளேன்.
இந்த பிரச்சினைகளை இழுத்தடிக்க முடியாது. நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை அடையும் போது அதன் பங்காளிகளாக வடக்கு மக்களும் இருப்பது முக்கியம். இன்னும் பத்து வருடங்களில் அதிக இலாபம் பெறப்படும் போது அதன் பிரதிபலன்கள் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் உரித்தாக வேண்டும். வடக்கில் இப்போதும் பொது அரச கடிதங்கள் சிங்கள மொழியிலேயே கிடைப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவ்வாறில்லை. நாட்டில் தமிழும் அரச கரும மொழியே. மொழி பெயர்ப்பாளர் குறைபாடுகள் இருக்கலாம். அவற்றைத் தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழில் பணியாற்ற அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் 500 பேருக்கு பயிற்சி வழங்கவும் தீர்மானித்துள்ளோம். தேவைப்பட்டால் இதனை மேலும் அதிகரிப்போம். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். அமைச்சர் சாகல ரத்நாக்க, விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது தற்போது காலாவதியாகிய சட்டமாகும். நாம் அதனை நீக்கி விட்டு தேவைப்படின் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நடைமுறையிலுள்ளது போல் சட்டமொன்றை கொண்டுவர முடியும். காணாமற்போனவர்கள் தொடர்பில் பேசப்படுகிறது. காணாமற்போனோர் தொடர்பில் எம்மிடமுள்ள பட்டியலில் இல்லாதோர் பெரும்பாலானோர் மரணமடைந்தவர்களாகவே கருதப்படுவர். கவலையான விடயம்தான். அந்த விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் கல்வித்துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை மற்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளேன். படையினரைப் பொறுத்தவரை தற்போது வடக்கில் சட்டபூர்வமான படையினர் மட்டுமே உள்ளனர். 1990 காலகட்டத்தில் இந்திய படையினர் அனுப்பப்பட்டு விட்டனர். ஆயுதம் தாங்கிய புலிப்படையினரும் தற்போது கிடையாது.
இந்த வகையில் 2002ம் ஆண்டில் கடற்பரப்பையும் நிலப்பரப்பையும் பாதுகாக்கும் படையினரின் பொறுப்பை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். புலிகளும் கூட அதை ஏற்றுக்கொண்டிருந்தனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் சீரடையும் போது படிப்படியாக படையினர் வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்படுவர். இது தொடர்பில் படைத் தளபதிகள் எம்மிடம் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெனீவா தீர்மானத்தின்படி யார் குற்றம் புரிந்தவர்கள் என்பது இனங்காணப்பட வேண்டும். இந்தப் பொறிமுறைக்கு ஜப்பானின் உதவியுடன் இது தொடர்பில் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.விரைவில் இது தொடர்பில் தீர்வு காணப்படும். நாம் படையினரை ஆபிரிக்காவிற்கு அனுப்பி பயிற்சிகளை வழங்கி வருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இலங்கையில் பொலிசும், இராணுவமும் தமிழ், சிங்களம் என இலங்கையர்களைக் கொண்டதாக இருப்பது முக்கியம். நாம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம்.
225 பேரைக்கொண்ட அரசியலமைப்புச்சபை ஏற்படுத்தப்படவுள்ளது. வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் இது செயற்படுவது உறுதி. 18வது அரசியலமைப்புத் திருத்தம் போல் ஜி. எல். பீரிஸின் ‘ஜுண்டா’முறையாக இது இருக்காது.” என்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply