வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்
கடல்சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ என்ற செயற்கைகோளுடன் இஸ்ரோ அனுப்பிய பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ என்ற 5-வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கான 48 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 18-ந்தேதி காலை 9.31 மணிக்கு தொடங்கியது.
அனைத்து ஏற்பாடுகளும் மிகச்சரியாக செய்யப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி, இன்று காலை 9.31 மணியளவில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
புவிஈர்ப்பு விசையின் தாக்கத்துக்குள்ளாகும் உயரத்தையும் கடந்து படுவேகமாக சீறிச்சென்ற பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்டின் பயணம் திட்டமிட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதேபோல், கடல்சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக மேலும் இரு செயற்கைகோள்களையும் இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply