சென்னை சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம்: டக்ளஸ் மீதான விசாரணை ஆரம்பம்

daclasமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை செசன்சு நீதிமன்றத்தில்நேற்று(19) ஆரம்பமானது. பொலிஸ் தரப்பு முதல் சாட்சியான கூலித் தொழிலாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அவர் தெரிவித்ததாவது.ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுடன்1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு கொளுத்தினர். இதில் டக்ளஸ் தேவானந்தாவின் சகாக்களுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதன்போது, டக்ளஸ் தேவானந்தாவின் சகாக்கள் இயந்திர துப்பாக்கியால் சுட்டதில், திருநாவுக்கரசு என்பவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உட்பட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கை தனியாக பிரித்து சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சாந்தி முன்னலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பு வக்கீல் எம்.பிரபாவதி ஆஜராகி, ‘சாட்சிகள் விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். அல்லது உயர் நீதிமன்ற ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, அவர் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, அங்கிருந்து ‘வீடியோ கான்பரன்சிங் ‘ மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று ஏற்கனவே மனு செய்துள்ளேன்’ என்று கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா சார்பில் வக்கீல்கள் ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘இதுகுறித்து தகுந்த முடிவினை இந்த நீதிமன்றம் எடுக்கவேண்டும்’ என்று வாதிட்டனர்.

பொலிஸ் தரப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘வீடியோ கான்பரன்சிங் வசதி இந்த நீதிமன்றத்தில் இல்லை. எனவே, இந்த வசதியை செய்து தரக்கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியதுள்ளது. அதன்பின்னர், டக்ளஸ் தேவானந்தாவை நேரில் ஆஜராக்குவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

இதையடுத்து, அரசு வக்கீல் எம்.பிரபாவதி எழுந்து, ‘இந்த வழக்கின் பொலீஸ் தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை இப்போதே தொடங்கவேண்டும்’ என்றார். இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து பொலிஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:1986-ம் ஆண்டு எனக்கு 22 வயது. கூலித்தொழில் செய்து வந்தேன். அந்த ஆண்டு நவம்பர் முதலாம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது சிலர் தெருவில் வெடில் கொளுத்தினர் . இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் எதிர்ப்பு தெரிவித்து தெருவில் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, கதிரவன், நாகராஜன் ஆகியோர் அவர்களை கண்டித்தபோது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.இதில் ஆத்திரமடைந்த இலங்கை தமிழர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை தூக்கிவந்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர். இதில், திருநாவுக்கரசு வயிற்றில் குண்டு பாய்ந்து அவர் இறந்து விட்டார். என் இடுப்பிலும், கை விரல்களிலும் குண்டுகள் பாய்ந்தன. என்னை போல பலர் குண்டு அடிபட்டு காயமடைந்தனர்.

எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டவரின் பெயர் ஆனந்தன். அப்போது அவர் மெல்லிய மீசையும், குறுந்தாடியும் வைத்திருந்தார். அவரை இப்போது பார்த்தாலும் என்னால் அடையாளம் காட்ட முடியும். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார். பின்னர், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி (01)திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply