மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் குறித்துப் பரிசீலிக்கத் தயார்:கெஹலிய றம்புக்வெல்ல

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பரிந்துரைக்கப்பட்டபடி மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்வது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்தார்.  மோதல் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்து, இலங்கை அரசாங்கம் பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி சர்வதேச நடவடிக்கை படையணியொன்று அங்கு நுழைவதற்கும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாதுகாப்புப் பேச்சாளர் தெரிவித்தார்.

“20 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற வழிசெய்யும் என்றால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் பரிந்துரைக்கும் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்துக்கு நாம் தயார்” என்றார் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல.

அரசாங்கம் வகுக்கக்கூடிய வழிமுறைகள் எவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்காவிட்டாலும், கள நிலைமைகளைப் பொருத்து அவை காலத்துக்குக் காலம் மாற்றமடையலாம் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்ளப்பட்டு, மனிதாபிமான தலையீட்டுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என, கடந்த வியாழனன்று நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐ.நா. சார்ப்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது குறித்தும் இதன்போது கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும் என்று அமெரிக்கத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

“மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக 48 மணிநேர மோதல் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் செய்தபோதும், புலிகள் அதற்கு இணங்காத காரணத்தினால் மக்கள் தொடர்ந்தும் அங்கு சிக்குண்டுள்ளனர்” என்று இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் ஒரு மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்ளப்படுவதாயின் இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் வழிமுறைகளுக்கு அமையவே அது மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய, வெளியாரின் தலையீடோ, செல்வாக்கோ இதுவிடயத்தில் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று கூறினார்.

“பொதுமக்களைக் கருத்தில் கொண்டு எதிரிக்கு எதிரான விமான மற்றும் கனரக ஆயதப் பயன்பாட்டை நாம் நிறுத்திவிட்டோம். அதேநேரம், பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்குவதன் மூலம் புலிகள் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்த அமைச்சர் றம்புக்வெல்ல,

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு போர்நிறுத்தம் குறித்து அரசாங்கம் ஆர்வம் கொள்ளவில்லை எனவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னர் பாதுகாப்புப் படையினர் புலிகளை இல்லாதொழிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் இலங்கை விவகாரம் குறித்துக் கலந்துரையாடுவதற்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வியாழனன்று கூட்டப்பட்ட உத்தியோகப்பற்றற்ற பாதுகாப்புசபைக் கூட்டத்தின் பின்னர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்துக்கான கோரிக்கை இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply