கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்ற அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது : இரா. துரைரட்னம்

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்களால் எற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரட்னம் கூறுகின்றார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்னம் அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார். இதில், “இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஊடாகவே தமிழ் மக்களுக்காக மாகாண சபை நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது.விரும்பியோ விரும்பாமலோ நிர்ப்பந்தம் காரணமாக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாணசபை உருவாக்கப்பட்டது.

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை பெறுவதற்கு சகல தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் குறிப்பாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் அயராது உழைக்க வேண்டும் .

நெருக்கடி மிக்க இக் கால கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து கூட்டுச் சேர்ந்து அதிகாரப் பரவலுக்கான தீர்வு திட்டத்தை அமுல் படுத்துவதற்கு அயராது உழைக்க வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கலுக்குரிய செயல்பாடுகள் தேசிய மற்றும் சர்வ தேச ரீதியாக தற்போது பேசப்பட்டு வரும் இவ் வேளையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களுக்காக போரடியவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அமைச்சர் கிழக்க மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

கிழக்கு மாகாணத்தில் 7 ஆயிரம் மக்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வியை தொடராமல் இடை நிறுத்தியிருக்கின்றனர்.இந்த நிலையில் இப்படியான கருத்துக்கள் எந்த வகையிலும் பொருத்தமானதாக அல்ல.

30 வருடங்களுக்கு மேலாக ஒட்டு மொத்தமாக தமிழ் பேசும் மக்கள் அனைத்தையும் இழந்த இந் நிலையில் அமைச்சரின் இக் கருத்தானது அம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply