சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு: ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும்தானா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி

2016-02-13-01-27-12-460987896சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு விசாரணையின் போது, ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான இந்த தடையை நீக்கவும், அனைவரும் சமம் என்ற வகையில் நெறிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், சபரிமலை கோவிலில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு தங்கள் தரப்புக்கு மேலும் அவகாசம் தேவை என்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

‘ஹேப்பி டு பிளீட்’ என்ற பெண்கள் அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி இந்த விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கேரள அரசு தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி ஆஜரானார். கேரள அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, ‘‘அரசு முன்பு எடுத்த நிலைப்பாட்டில் தவறு இருந்ததால் அதனை திருத்திக்கொள்வதும், அதனை கோர்ட்டின் பார்வைக்கு முன்வைப்பதும் அரசின் கடமை’’ என்று பதில் அளித்தார்.

பிறகு சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபாலிடம், ‘‘பெண்களுக்கு தடை விதிப்பது எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது? ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்கள் ஆன்மிக அனுபவங்களுக்கு தகுதியற்றவர்களா?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை நம்பிக்கை சார்ந்த விஷயமாகும் என்று கூறிய மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், சபரிமலை யாத்திரை பற்றியும் அது தொடர்பாக பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

 

பின்னர் நீதிபதிகள், ‘‘சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். தாய்மைக்கு எங்காவது பாரபட்சம் காட்ட முடியுமா? ஆண்-பெண்ணுக்கு இடையேயான பாரபட்சம் சரித்திர ரீதியாக எப்போது தொடங்கியது?’’ என்றும் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு மிகவும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று பதில் அளிக்கப்பட்டது.

 

பின்னர் இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல்கள் ராஜூ ராமச்சந்திரன் மற்றும் கே.ராமமூர்த்தி ஆகியோரை ‘அமிகஸ் க்யூரி’ பொறுப்பில் நியமிப்பதாகவும், இதில் இருவருக்கும் உதவுவதற்காக வக்கீல் பரமேஸ்வரனை நியமிப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

 

பின்னர் மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபாலின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply