ஜெயலலிதா பிறந்தநாளன்று அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் இலவச உணவு: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24-ந்தேதி அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் இலவச உணவு வழங்கப்படும் என்றும், சிறப்பு மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 282 அம்மா உணவகங்களிலும் வரும் 24-ந்தேதி அன்று ஒருநாள் முழுவதும் சர்க்கரை பொங்கல் மற்றும் விலையில்லா உணவு வழங்கப்படும். அம்மா உணவகங்களில் தொடர்ந்து உணவு அருந்துபவர்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும்.
கொசுகளை கட்டுப்படுத்தும் வகையில் கம்பூச்சியா மீன் குஞ்சுகள் 68 இடங்களில் தேங்கி கிடக்கும் நீர்நிலைகளில் விடும் முகாம் தொடங்கப்படும். பொதுமக்களுக்கு விலையில்லா கொசு வலைகள் வினியோகம் செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 68 பூங்காக்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள், 68 இடங்களில் ரத்ததான முகாம்கள், 68 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள், 68 இடங்களில் தொற்று நோய்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம், 68 நடமாடும் மருத்துவ முகாம்கள், தாய்சேய் நல மருத்துவ முகாம்கள், 68 இடங்களில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் வரும் 24-ந்தேதி அன்று பிறக்கும் குழந்தைகள் பெயரில் தலா ரூ.10 ஆயிரம் வங்கியில் வைப்புநிதியாக செலுத்தப்படும்.
திருநங்கைகளுக்கு கலைநிகழ்ச்சி நடத்தி 68 பேர்களுக்கு பரிசுகளும், பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி 68 பேர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 100 வயதிற்கு மேல் வாழ்ந்து வரும் முதியோர்களை கவுரவித்து பரிசும், தொழிலாளர்களுக்கு தங்கள் உபகரணங்கள் எடுத்துச்செல்ல தரம்வாய்ந்த பிரத்தியேகமான 2 ஆயிரம் பைகளும் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் சிறந்த மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பசுமைப்போர்வையை அதிகரிக்க பொதுமக்களுக்கு 68 ஆயிரம் நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படும். பேருந்து சாலைகள், முக்கியச்சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகளில் ஒவ்வொரு கோட்டங்களிலும் 68 ஆலமரக்கன்றுகள் வீதம் 13 ஆயிரத்து 600 மரக்கன்றுகள் நடப்படும்.
வீட்டுத்தோட்டம், மாடி காய்கறித்தோட்டம், மற்றும் பால்கனி காய்கறித்தோட்டம் வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஒத்துழைப்போடு ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற தலை சென்னை பெருநகர மாநகராட்சியின் 100 பூங்காக்களில் வழங்கப்படும்.
மாநகராட்சி அரசு பள்ளிகள், மாநகராட்சி அரசு கட்டிடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தி பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்படும். கடற்கரையில் மணற்சிற்பங்கள் அமைப்பு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
68 நீர்நிலைகளில் மிதக்கும் பொருட்கள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி, மழைநீர் சேகரிப்பு தன்மையை மேம்படுத்தும் பணி நடைபெறும். குடியிருப்போர் நலச்சங்கங்கள், சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கப்படும்.
சமுதாய ஒருமைப்பாட்டினை வளர்க்கவும், விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கவும் ‘அம்மா’ சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியாக 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply