கும்பகோணம் மகாமக விழா: 6 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

thansavoor தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா நடைபெறும். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா கடந்த 13–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.இதையொட்டி கும்பகோணத்தில் உள்ள மகாமககுளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். அங்கு உள்ள தீர்த்த கிணறுகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணம் மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஊர்காவல் படை ஐ.ஜி.பெரியய்யா கும்பகோணம் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரிக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மகாமககுளத்திற்குள் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஆரஞ்சு நிற உடை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பகோணம் வரும் பஸ்கள் நகரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 7 தற்காலிக பஸ் நிலையங்களுக்கு மட்டும் செல்லும். அங்கிருந்து மினி பஸ்கள் இயக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் முதியவர்களை அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாகனங்களில் வருபவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு நகருக்குள் செல்ல வேண்டும்.மகாமக விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.கும்பகோணம் மகாமகா விழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

முதலாவதாக விநாயகர் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. அதன் பின்னால் வள்ளி– தெய்வானையுடன் முருகன், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளிய தேர்கள் சென்றன. 5 தேர்கள் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேரோட்டம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.மகாமக கோவில்களில் ஒன்றான கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.மகாமக விழா தொடங்கி 6 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீராடி உள்ளனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்துள்ளனர்.சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நகரில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply