தற்காலிக மோதல் நிறுத்தம் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்தியா வரவேற்றுள்ளது

பொதுமக்களை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை நிறுத்துவது குறித்து ஆராயத் தயார் என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.  “ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதால் தொடர்ச்சியான இழப்புக்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுமூலம் விடுவிக்கப்படாத பகுதிகளில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்ற முடியுமென நாம் நம்புகிறோம்” என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறினார்.இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், 13வது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்திவரும் நிலையில், தற்காலிக மோதல் தவிர்ப்பு என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை இந்தியா வரவேற்றுள்ளது.

அதேநேரம், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர் ரி.கே.ஏ.நாயர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரைச் சந்தித்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடியதாக மேனன், புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இனப்பிரச்சினைக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அரசியல் தீர்வொன்றை முன்வைத்தல், வடக்கின் மீள்கட்டுமானத்தில் எவ்வாறு இந்தியா உதவி செய்ய முடியும் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துவர்களுக்கான மனிதநேய உதவிகளில் இந்தியாவின் பங்களிப்பு ஆகிய மூன்று விடயங்கள் குறித்து நாயரின் இலங்கை விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென மேலும் ஒருதொகுதி உணவு மற்றும் மருந்துப் பொருள்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்திருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், ஏற்கனவே ஒரு தொகுதி வைத்தியர்கள் குழுவொன்று இலங்கையின் புல்மோட்டையில் வைத்தியசாலை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சையளித்து வருவதாகக் கூறினார்.

தற்காலிக மோதல் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கத் தயார்: இலங்கை

இதுஇவ்விதமிருக்க, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமக தெரிவித்தார்.

மோதல்கள் நிறுத்தப்படும் காலப்பகுதியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்படவிருப்பதுடன், விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கான பல்வேறு பாதுகாப்பான பாதைகள் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

மோதல்கள் நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளுக்குச் சாதகமாகப் பதிலளிக்கும் நோக்கிலேயே இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவது பற்றி பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம, பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகளும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துவிடுவார்கள் என்பதில் அரசாங்கம் விளிப்புடன் இருப்பதாகக் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதற்கு அமைய மனிதாபிமான மோதல் நிறுத்தம் செய்துகொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கத் தயார் என இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பலிககார ஆகியோரும் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply