கடல்மார்க்கமாக குடாநாடு செல்லும் வன்னி மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை
வன்னியிலிருந்து கடல்மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்கு வருபவர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பது பற்றி யாழ் குடாநாட்டில் ஆராயப்பட்டுள்ளது.
வன்னியில் தொடரும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கடல் மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
இந்தச் சந்திப்பு பலாலி உயர்பாதுகாப்ப வலயத்தில் நடைபெற்றதுடன், இதில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வன்னியிலிருந்து வருபவர்களைத் தங்க வைக்கும் இடம் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், வன்னியிலிருந்து குடாநாட்டுக்கு வருபவர்களுக்கான சுகாதார வசதிகள் பற்றி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் வன்னியிலிருந்து கடல் மார்க்கமாக குடாநாட்டுக்கு வந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் ஊர்காவற்துறைப் பொலிஸாரின் கண்காணிப்பில் தொடர்ந்தும் குடாநாட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
ஊர்காவற்துறைப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்களை மன்னாரிலுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்குமாறு ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அவர்கள் இன்னமும் மன்னாருக்கு அனுப்பப்படவில்லையென யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பிலிருந்து சென்ற வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ் குடாநாட்டு உயர் இராணுவத் தளபதிகளுடன் வைத்தியசாலைக்குச் சென்ற அந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரி வெளிநோயாளர் பிரிவு உட்பட வைத்தியாலையைப் பார்வையிட்டுச் சென்றதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply