குமார் குணரட்னம் போன்றோரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் என்ன கிடைக்கின்றது?
குமார் குணரட்னம் போன்ற அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு என்ன கிடைக்கின்றது என, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். குமார் குணரட்னத்தை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பதற்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்றுடன் நூறாவது நாளாக சத்தியாகிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு இன்று இடதுசாரி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கோட்டை ரயில் நிலையத்தின் முன் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, சோலிசக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய மஹிந்த தேவகே,
குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது. விமல் வீரவன்சவுக்கு இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்தன. எனினும் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டார். கோட்டாபய, பசில் போன்றவர்களுக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. இவை பிரதமருக்கு பிரச்சினையில்லை. ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்று அரசியல் பிரச்சினை காரணமாக அந்த நாட்டுக்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களை தாயகம் வருமாறு அழைக்கின்றனார். இலங்கைக்கு வந்த குமார் குணரட்னத்தை கைது செய்துள்ளனர். இது கேலிக்கூத்தானது என்றார்.
மேலும், இங்கு உரையாற்றிய விக்ரமபாகு கருணாரட்ன கூறியதாவது,
ஜனாதிபதியும் பிரதமரும் உலக நாடுகளுக்கு சென்று நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகின்றனர். ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி பெரிதாக பேசும் இவர்கள் குமார் குணரட்னத்தை 100 நாட்களாக தடுத்துவைத்துள்ளனர்.
குமார் குணரட்னம் போன்ற அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு என்ன கிடைக்கின்றது என்று நாங்கள் கேட்கிறோம்.
இதனால், குமார் குணரட்னத்தை விரைவாக விடுதலை செய்து அவரது அரசியல் உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply