அடுத்த வருடம் கச்சதீவில் அழகிய ஆலயத்தில் வழிபாடு! திருப்பலியில் அறிவித்தார் யாழ்.ஆயர்
அடுத்த வருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திடைய உற்சவத்தின் போது, கச்சதீவிலே புதிதாக அமைக்கப்பட்ட அழகிய அந்தோனியார் ஆலயத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றுக்காலை ஆலயத்தின் வருகை தந்த ஆயர், அங்கு திருச்சொரூப வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து திருப்பலிக்காக தயாராக முன் பலர் என்னிடம் வந்து கேட்டுவிட்டார்கள், இங்கே ஒரு அழகான ஆலயத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவி செய்கின்றோம் என்று.
இந்த வேண்டுதல் பற்றி நான் இங்கே குறிப்பிடுவதற்கு முன், கச்சதீவு அந்தோனியார் ஆலய அருட்தந்தை அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்து விட்டார்.
எனவே இந்த புதிய ஆலயத்திடைய திருப்பணி வேலைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் எனக்கு மூன்று பேர் இருக்கின்றார்கள். கடற்படை தளபதி ரவி குணரட்ன எனது நண்பன். அவர் நினைத்தால் இது நிறைவேறும். அதற்கு துணையாக இந்த ஆலயத்தை கட்டுவதற்கு எனது நீண்ட நாள் நண்பனான யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் இருக்கின்றார்.அவரும் இந்த ஆலயத்தை கட்டுவதற்கு முன்வருவார். எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது வடமாகாண ஆளுநராக பதவியேற்றிருக்கும் ரெஜினோல்ட் குரே நிச்சயம் ஆவன செய்வார்.
எனவே கச்சதீவின் பங்குத்தந்தை உற்சாகமாக இருந்தால், அடுத்த வருடம் நீங்கள் புதிய அழகிய ஆலயத்தை காண்பீர்கள் என்றார்.
ஆயருடைய குறித்த நற்செய்தியை கேட்ட இலங்கை- இந்திய யாத்திரிகர்கள் தங்களது கைகளை தட்டி தமது விருப்பத்தைத் தெரிவித்ததோடு நன்றியையும் கூறிக் கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply