வங்காளதேசத்தில் இந்து கோயில் பூசாரி படுகொலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்
வங்காளதேசத்தில் இந்து கோயில் பூசாரி படுகொலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தனியார் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவர்களின்மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணமாக இந்து கோயில் பூசாரி ஒருவர் நேற்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சன்னி இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், இங்குள்ள பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயிலுக்கு நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வெளியே இருந்தபடி கோயிலின்மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். கற்களை எறிவது யார்? என்று பார்ப்பதற்காக அந்த கோயிலின் பூசாரியான ஜஜ்னேஸ்வர் ராய்(50) என்பவர் வெளியே வந்தார்.
அப்போது பூசாரியின்மீது பாய்ந்த இருவர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியதுடன், கழுத்தையும் அறுத்து துடிதுடிக்க கொன்றனர். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோட முயன்றவர்களை பிடிப்பதற்காக அருகாமையில் இருந்தவர்கள் விரட்டிக்கொண்டு வந்தனர்.
அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பீதியை ஏற்படுத்தியபடி அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான பின்னணி மற்றும் கொலையாளிகள் யாராக இருப்பார்கள்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையவழி நடமாட்டங்களை கண்காணித்துவரும் அமெரிக்காவை சேர்ந்த தனியார் உளவுநிறுவனமான ‘சைட் இன்ட்டெலிஜென்ஸ் குழுமம்’ பூசாரியான ஜஜ்னேஸ்வர் ராய் கொலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் டுவிட்டர் மூலம் பரிமாறிய ஒரு செய்தியின்மூலம் மேற்கண்ட தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply