வடகொரியா மீது பொருளாதாரத் தடை: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது
வடகொரியாவின் மீது மேலும் சில தடைகளை விதிப்பது தொடர்பான தீர்மானத்தின்மீது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே கடந்த மாதம் ஆறாம் தேதி ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.
இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று தெரிவித்தது.
வடகொரியாவின் இந்த அசாத்தியமான துணிச்சல் உலக நாடுகளை நிமிர்ந்துப் பார்க்கும்படி செய்திருக்கும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடுகளான 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளின் அடிப்படையில் வடகொரியா மீது மேலும் சில தடைகளை விதிக்கும் தீர்மானத்தின்மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
வடகொரியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதியாவதை தடுக்கும் வகையில் கப்பல்களை வழிமறித்து பரிசோதிப்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் இந்த தீர்மானத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வடகொரியாவின் நட்புநாடான சீனாவும் வாக்களிக்கும் என நம்பப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply