திருமங்கலம் தடுப்பு முகாமில் இலங்கை அகதி மின் கம்பியில் உடல் கருகி தற்கொலை!
திருமங்கலம் அருகே வருவாய்த்துறை அதிகாரி திட்டியதால் மனமுடைந்த இலங்கை அகதி, மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் இன்று முகாமிற்கு சென்றுள்ளார்.
அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது.
இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார்.
தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கூறி, ரவிச்சந்திரன் உடலை எடுக்க மறுத்து, இலங்கை அகதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply