புலிகளின் 130 மி.மீ. ஆட்லெறி தாக்கியழிப்பு:பிரிகேடியர் உதய நாணயக்கார
புலிகளின் 130 மி.மீ ரக கனரக ஆட்லெறி ஒன்றை விமானப் படையினர் கிபீர் விமானங்கள் நேற்று முற்பகல் தாக்கியழித்துளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே புலிகளால் பொருத்தப்பட்டுக்கொண்டிருந்த இந்த பீரங்கியை இலக்கு வைத்து தரைவழியாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய அதே சமயம், விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் கனரக ஆட்லெறி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே அதாவது, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்பகுதியில் செயற்பட்ட புலிகள் 130 மி.மீ. ரக கனரக பீரங்கியை பொருத்தி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் உள்ள பிரதேசத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே புலிகள் இந்த கனரக பீரங்கியை பொறுத்த முற்பட்டுள்ளனர்.
விமானப் படையினர் உரிய இலக்கு மீது தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 130 மி.மீ. ரக பீரங்கி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதை விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொள்ளவிருந்த இந்த தாக்குதல் முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply