வட கொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர கிம் ஜாங் அன் உத்தரவு: ஐ.நா. கவலை
வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன் குண்டு சோதனை, தொடர்ந்து கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக அரங்கில் பரபரப்பையும், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தையும்
ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே தென்கொரியாவில், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 7-ந் தேதி
தொடங்கி நடந்து வருகிறது. இது வடகொரியாவுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
தென்கொரியாவையும், அமெரிக்காவையும் எரித்து சாம்பலாக்குவேன் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற ஏவுகணைகளில் பொருத்துகிற வகையில் சிறிய ரக அணுகுண்டுகளை
உருவாக்கி உள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்துள்ளார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் சிறிய ரக அணுகுண்டுடன் அவர் தோன்றும் படம் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறுகிய தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை சோதனையை
மேற்பார்வையிட்ட கிம் ஜாங் அன், “சிறிய ரக அணுகுண்டுகளை தொடர்ந்து பரிசோதித்து பார்க்க வேண்டி உள்ளது” என
கூறினார்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறிய ரக அணு குண்டுகள் ஏற்படுத்தும் நாசத்தை மதிப்பிடுவதற்காக தொடர்ந்து அணு
ஆயுத சோதனைகள் நடத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கொரிய தீபகற்ப பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில்,
“வியாழக்கிழமையன்று 2 குறுகிய தூர ஏவுகணை சோதனைகள் நடத்தியது, அணு ஆயுத சோதனையின் ஒரு அங்கம்தான்” என
கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவின் நடவடிக்கைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் அதிகரித்திருப்பதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்
கி மூன் கவலை தெரிவித்துள்ளார். சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபடக்கூடாது என அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply