நல்லிணக்க விவகாரம்:இலங்கை விரைந்து செயல்பட வேண்டும்: ஐ.நா.

unoஇலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் வலியுறுத்தினார்.இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 31ஆவது அமர்வில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பொறுப்புடைமை, நல்லிணக்கம், நீடித்த அமைதி ஆகியவற்றை நோக்கி, இலங்கை அரசு தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம், தன்னாட்சி நிறுவனங்களை சீரமைக்கவும் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுதந்திரமாக கருத்து தெரிவிக்கவும், விவாதம் நடத்துவதற்குமான சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளில், மிகவும் முக்கிய நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், தமிழில் தேசிய கீதத்தைப் பாடுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதுபோல, ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைத்தல் போன்றவை தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை இலங்கை அரசு செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கு கொழும்புக்கு ஹுசேன் கடந்த பிப்ரவரி மாதம் வந்தார். அதைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை மீது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வரும் ஜூன் மாதம் விவாதம் நடத்தப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply