மியான்மரின் புதிய அதிபரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு தொடங்கியது: ஆங் சான் சூகியின் ஆதரவாளர் வெற்றிபெற அதிக வாய்ப்பு
மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்றுகாலை தொடங்கியது.மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக் காலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வருகிற ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. சூகி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் ஆங் சான் சூகி, இந்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கியுள்ளார். இவர் சூகியின் பால்யகால நண்பர் ஆவார். இவர் தவிர சூகி கட்சியின் எம்.பி. ஹென்றி வான் தியோ மற்றும் ராணுவத்தின் சார்பில் மியந்த் ஸ்வீ என்பவரும் போட்டியிடுகின்றனர்.
657 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இன்று காலை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஐந்து உறுப்பினர்கள் இன்று சபைக்கு வராதநிலையில் 652 எம்.பி.க்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் கைகளிலும் வாக்குச்சீட்டை அளித்த சபாநாயகர் மான் வின் கைங் தான், ‘நீங்கள் அதிபராக்க நினைக்கும் நபரின் பெயரை ‘டிக்’ செய்தும், விரும்பாத பெயரை அடித்து, நீக்கியும் உங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்’ என அறிவித்தார்.
இன்றைய வாக்குப்பதிவில் அதிகமான வாக்குகளை பெறுபவரே நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். மற்ற இருவரும் துணை அதிபராக பொறுப்பேற்பார்கள். இருசபைகளிலும் ஆங்சான் சூகியின் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதால் அந்த கூட்டணியை சேர்ந்த ஒருவரே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply