எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி : வீ.ஆனந்தசங்கரி
இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல.
திருமதி மங்கையற்கரசி அவர்களின் இழப்பு தமிழ் மக்களை பொறுத்தவரையில் எத்தகைய பேரிழப்பு என்பதை இன்றைய சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய வகையில் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டியது எனது கடமையாகும். எந்த மண்ணுக்காக எந்த மக்களுக்காக இத்தனை கஷ்டங்களையும்; தனது கணவரோடு சேர்ந்து, அனுபவித்தாரோ அதே மண்ணில் அதே மக்கள் மத்தியில் தன் கணவரை பறிகொடுத்தார். ஈடு செய்ய முடியாத அவரின் இழப்பிற்கு அவரிடமிருந்த ஒரேயொரு பரிகாரம் கணவன் வாழ்ந்த இடத்திலே கணவர் விட்டுச்சென்ற பணியை தொடர்வது மட்டுமே.
ஆனால் துரதிஷ்டவசமாக அன்னாரின் ஆசை நிறைவேறாமைக்கு உரிய காரணத்தை என்னால் கூற முடியாத நிலை. என்னைப் பொறுத்தவரையில் பத்தாண்டுகள் வரை அரசியலில் அமிர்தலிங்கம் தம்பதியினருடன் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும் கடந்த 44 ஆண்டுகள் எவ்வாறு அன்னாரின் கணவர் மற்றும் பெருந்தலைவர்கள் காட்டிய வழியில் அம்மையார் திருமதி மங்கையற்கரசி; சென்றார்களோ அதே வழியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இலங்கை தமிழர்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ பெண்கள் பல்வேறு துறைகளில் தம்மை தனிமையில் அர்ப்பணித்தும், தங்கள் கணவருடன் இணைந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றனர். அமிர்தலிங்கம் தம்பதியினரும் அரசியலில் அதையே செய்தனர். அரசியலில் தீவிரம், விசுவாசம் என்பன பற்றி இன்றைய சமூகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதனை தெரியவைக்க இன்றைய சமூகம் தவறியமை வேதனைக்குரிய விடயமாகும். அமிர் தம்பதியினரின் அரசியல் தனியொரு சகாப்தம், கணவரை இழந்த பின்பும் அம்மையார் கணவர் இறுதிவரை கடைபிடித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதே கொள்கைகளையே இவரும் இறுதிவரை கடைபிடித்து வந்தார். தனித்து கணவரின் இலட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்க பேராவல் கொண்டிருந்தபோதும் அதற்குரிய வாய்ப்பினை தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் போனமைக்கு கட்சியின் சிலர் மேற்கொண்ட விபரீதமான முடிவுகள் காரணமாக அமைந்தது. இறுதி நாட்களில் கூட அம்மையார் தனது ஆதங்கத்தை மிக்க வேதனையுடன் எம்மிடம் கூறியிருந்தார். இவ்வாறான விபரீத முடிவுகளால் தமிழினத்குக்கு பெரும் அழிவு ஏற்பட்டது. மாறாக சிலருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
சகோதரி திருமதி மங்கையற்கரசி; ஒரு சில நாட்கள் வித்தியாசத்தில் எனது வயதை ஒத்தவர். அவருடைய கணவர், அகில இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து திரு. ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக தந்தை செல்வா புதிய கட்சியாகிய இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்தபோது அக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக செயற்பட்டு வந்தவராவார். அரசியலில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் அதிக தீவிரமாக செயற்பட்டதால் தந்தை செல்வா அவர்கள் இளைஞனாக இருந்த திரு.அமிர்தலிங்கம் அவர்களை வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் போட்டியிட வைத்தார். அத் தேர்தலில் தந்தை செல்வா தான் வகித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அமிர் அவர்களும் தோல்வியை தழுவிக்கொண்டார். இதன் பின் 1954ம் ஆண்டு திரு. மங்கையற்கரசி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இது திரு அமிர்தலிங்கம் அவர்களுக்கு ஆண்டவன் அளித்த வரப்பிரச்சாதமாக மனைவி என்ற பெயரால் சகோதரி மங்கையர்க்கரசி இணைந்துக்கொண்டார்.
அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் வகித்த பங்கு மிகவும் சொற்பமே. அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்களில் பெண்கள் அரசியல் மேடைகளில் ஏறுவதை பொதுவாக தமிழ் மக்கள் விரும்பாமையே. அவ்வாறான சூழலில் அரசியலில் பெரும் முரண்பாடுடைய அரசியல் பிரச்சனைகள் இருந்த அக்காலத்தில் தனது கணவரின் இலட்சியத்துக்கு உறுதுணையாக மேடைகளில் துணிந்து ஏறினார் திருமதி மங்கையற்கரசி;. அச்சந்தர்பத்தில் அம்மையார் பட்ட அவமானங்கள், கல்லெறிகள், சொல்லெறிகள் கொஞ்சநஞ்சமல்ல. பெண் சமுதாயத்தை பொறுத்தவரை அத்தகைய தீவிர அரசியல் பிரச்சாரத்தில் யாரும் ஈடுபட்டதாக நான் அறியவில்லை. அம்மையாரின் விடா முயற்சி, தீவிர பிரச்சாரம் தந்தை செல்வாவையும், தனது கணவரையும் வெற்றியடையச் செய்ததோடு தொண்டர்கள் சிலர் பாராளுமன்றம் செல்வதற்கும் வழிவகுத்தது. நீண்ட கட்டுரை எழுத வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல. இருப்பினும் சிலவிடயங்களை கூறியே ஆக வேண்டும். கணவருடைய செயற்பாடுகள் அத்தனையிலும் தோளோடு தோள்நின்று உழைத்தமையால் அம்மையார் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நெஞ்சை நிமிர்த்தி கோழைத்தனத்தை தலைகுனிய வைத்தவர் திருமதி மங்கையற்கரசி அவர்களாகும். திரு. அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், எதையும் எந்த இடத்திலும் தயக்கமின்றி கூறுபவர். இவ்விடத்தில் ஒரு சில சந்தர்ப்பத்தை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இலங்கை தமிழரசு கட்சியை வளர்த்தவர்களில் திருவாளர்கள் அமிர்தலிங்கம் தம்பதியினர், வன்னியசிங்கம், இரும்பு மனிதன் என்றழைக்கப்படும் நாகநாதன், ராஜதுரை, ராஜவரோதயம, இராசமாணிக்கம்; போன்ற பலர். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தீவிரமடைந்த சூழலில் தந்தை செல்வா அவர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை மறந்து செயற்படுவோம் என்ற பகிரங்க வேண்டுகோள் மூலமும், நேரடியாகவும், சில கட்சித்தலைவர்களை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழினம் கட்சி பேதங்களை மறந்து ஒன்று சேர்ந்த சந்தர்ப்பம் 14-05-1972 அன்று ஏற்பட்டது. இந்த தினத்திலேயே தமிழர் ஐக்கிய முன்னணியாக ஆரம்பித்து பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக செயற்பட்டு தமிழ் தலைவர்கள் எல்லோரையும் ஓரணியில் கொண்டு வந்தமை உலகம் முழுதும் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அன்று தமிழ் மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சியும் தொடர்ந்து மக்கள் காட்டிய உற்சாகம், செயற்பாடுகள் அத்தனையும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா தமிழ் மக்களுக்கென்று விட்டுச்சென்ற சொத்தாகும் என்று ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி அமைத்த நாளிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் ஓரிருவரை தவிர அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் உட்பட அனைவரும் கட்சி பேதங்களை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஏற்றுக்கொண்டனர். தந்தை செல்வா தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே 1977ம் ஆண்டு இறந்தார். அன்னார் இறந்து இரு மாதங்களுக்குள் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது. நம்மவர் ஒரு சிலருடைய அறியாமையால் கல்குடா தொகுதியில் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்தது. இக் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து சகோதரி திருமதி மங்கையற்கரசி அவர்களின் அன்பு கணவர் மரணித்தபோது அமிர்தலிங்கம் என்ற இமயம் சரிந்ததாகவே நாம் எல்லோரும் கருதினோம். இந்த இமயத்தின் வீழ்ச்சி தனக்கு பெரும் பொறுப்பை தனது கணவர் விட்டுச் செல்கின்றார் என்ற ஆதங்கம் அம்மையாரின் உயிரை பிடித்து வைத்திருந்தது. தனது கணவர் விட்ட பணியை தன் சிரம் மேல் ஏற்று செயற்பட புறப்பட்ட இந்த வீர மங்கையின் நடவடிக்கைகளுக்கு காரணம் கூற முடியாத சிலரால் முட்டுக்கட்டை போடப்பட்டது.
ஒரு மனைவியால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தனது கணவர் அவமதிக்கப்பட்டு விட்டார் என்பதை மட்டும் எந்தவொரு பெண்ணாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் எத்தனை தடவை பொலிசாரால் அவரின் முன்னிலையில் தாக்கப்பட்டதை அவமானமாக எடுத்து தனது கணவரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் வீர வடுக்களாக கணித்து தொடர்ந்து உற்சாகமூட்டிய வீர மங்கைதான் மங்கையற்கரசி அவர்கள். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த தனது கணவரோடு இணைந்து கலந்துகொண்ட போராட்டங்கள் பல. உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், கிராம யாத்திரை, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், அனைத்திலும் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் எஞ்சியிருந்த அரசியல் குரோதத்தை மறந்து செயற்பட்டவர்தான் இந்த வீர மங்கை. திருமதி மங்கையற்கரசி; அவர்கள் தனது கணவரின் மரணத்துக்கு பிரபாகரன் காரணமாக இருக்கமாட்டார் என்று மங்கையற்கரசி அவர்கள் தான் இறக்கும்வரை நம்பினார். அதற்கு ஆதாரமாக பிரபாகரனை தனது சொந்த பிள்ளையைபோல் நடத்தியதாகவும் தம் இருவரிலும் மிக்க பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என திரு சிவசிதம்பரம் அவர்களின் பூதவுடல் கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தவேளை தானும் சமூகமளித்து திரு. சு.ப.தமிழ்ச்செல்வனை பார்த்து என் கணவரை யார் கொன்றார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அவரின் நிலைப்பாட்டில் பெரியளவில் உண்மை உண்டு என நான் முழுக்க முழுக்க நம்புகிறேன்.
அம்மையார் இளையவர்களுக்கு தாயாகவும், மூத்தோருக்கு தங்கையாகவும் விளங்கியவர். கிராமயாத்திரை சென்ற போதெல்லாம் விருந்தோம்பல் நடைபெற்ற இடங்களில் பெரியவர், சிறியவர் என்று பாராது சொந்த பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவதைப்போல் சில உணவு வகைகளை தெரிந்தெடுத்து சிலருக்கு பரிமாறியதை கண்டு வியந்து ஏனையோர் பாராட்டியதை நான் கண்டிருக்கின்றேன். எவர் எதைச் சொன்னாலும் என் கூற்று முற்று முழுதாக உண்மையானதே. தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டதில் இருந்து தந்தை செல்வா திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் போன்ற தலைவர்களை மனப்பூர்வமாக ஏற்று அத்தனைப் பேருக்கும் பெரும் மதிப்பு கொடுத்து நடந்தவன் நான். தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா, தாம் மூவரும் அதாவது திருவாளர்கள் ஜி.ஜீ பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான், தான் ஆகியோர் தமிழ் மக்களுக்காக விட்டுச்செல்லப்படும் பெரும் சொத்தாக மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கக்கூடிய ஓர் அமைப்பாக விட்டுச்சென்றனர். அதற்கு இந்தத் தலைவர்கள் மீது பற்றுக்கொண்ட எவராலும் அவர்களின் அபிலாஷைகளுக்கு முரணாக செயற்படுவது விரும்பத்தக்க விடயமல்ல.
சிலரின் சிந்தனையற்ற செயலால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நட்டம் திரு. அ.அமிர்தலி;ங்கம் அவர்கள் இறந்ததன் பின்பு திருமதி மங்கையற்கரசி அவர்களுடைய பங்களிப்போடு செயற்பட்டிருந்தால் தலைவர்களின் இலட்சியத்தை அடைய பெருமளவில் உதவியிருக்கும். இதற்கு அவர் யாராக இருந்தாலும் சிலரின் நடவடிக்கை முட்டுக்கட்டையாக அமைந்தது.
தமிழரசு கட்சியின் புனரமைப்புக்கு தான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்றும், எமது பெருந் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்றும், விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே தனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வந்தார் எனவும் தமிழரசு கட்சியை அவர் ஒருபோதும் புனரமைக்க எண்ணவில்லை என்றும் வேறு சில காரணங்களையும் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி தந்தை செல்வா விட்டுச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியில் திருவாளர்கள் அமிர்தலிங்கம், திருமதி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்கள் தந்தை செல்வாவின் நிலைப்பாட்டில் இருந்து சிறிதளவும் மாறவில்லை. இப் பெருந்தலைவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியே ஒரேயொரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்பதே மறைந்த பெருந் தலைவர்களுடைய அபிலாசையாகும். மாற்று ஒழுங்கு எதையும் அவர்கள் தமிழ் மக்களுக்கு விட்டுச்செல்லவில்லை. இன்று இயங்கும் தமிழரசு கட்சி தந்தை செல்வா இறந்து 28 ஆண்டுகளின் பின் சிலரின் சுயநல் போக்கால் உருவாக்கப்பட்டது.
இறந்தவர்களை பற்றி பேசி அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் இறந்தவர்கள் இல்லை என்ற காரணத்தால் எதனையும் தம்மிஷ்டம்போல் கூறிவிட்டு முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிடும் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி அல்ல. இதுவரை நாம் இழந்த தலைவர்கள் அத்தனை பேரினது இறுதி மூச்சு தமிழர் விடுதலைக் கூட்டணியே.
அன்னாரின் இறுதி ஆசையாகிய கணவரின் அகால மரணத்தை பற்றி விசாரிப்பதற்கு ஓர் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முயற்சி எடுக்கும் என்ற உறுதியோடு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் சார்பில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply