ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தாபய
லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோதாபய ராஜபக்ஷ போன்றோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.அத்தகைய சம்பவங்கள் மறைக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் என குறிப்பிட்ட அவர், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடியாகச் செயற்பட்டதே லசந்தவின் படுகொலை விவகாரம் மறைக்கப்பட்டமைக்கு மற்றொரு காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் நீங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் உங்களையும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் வெளிவருகின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியதாவது, எமது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் 48 மணித்தியாலங்களில் அது தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது.
அப்போது கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு இது, இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் பிரிவு கோதாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. அதனால் தான் இவ்வாறு நேர்ந்துள்ளது.
இது மட்டுமன்றி அக்காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அனைத்துமே மறைக்கப்பட்டுவிட்டன.
இப்போது இவற்றில் ஓரிரண்டு சம்பவங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ரவிராஜ் படுகொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன. இதில் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு, அவர்களது வாகனம் போன்றவையும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இத்தகைய சம்பவங்கள் ஒரு கும்பலினால் மேற்கொள்ளப்படுவதாக நானும் அப்போது அறிந்திருந்தேன் இதில் எமக்கு தொடர்பு இருக்கவில்லை லசந்த எனக்கு எதிராக செயற்படவுமில்லை.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம். இன்னும் சிலருக்கும் கோதாபயவுக்குமிடையில் பிரச்சினைகள் இருந்தன. ஒரு கும்பலே இவற்றை செய்தன. அந்தக் கும்பலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ போன்றோர் செயற்பட்டுள்ளனர். இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் மக்களுக்கு இவ்விடயத்தில் தெளிவில்லை. இதனால்தான் இதில் இராணுவம் தொடர்புபடுகிறது. இராணுவத் தளபதி தொடர்புபடுகிறார் என வதந்திகள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மறைக்கப்பட மற்றொரு காரணமும் உள்ளது. அவரது சகோதரர் லால் விக்ரமதுங்க மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடியாக செயற்பட்டதே இதற்குக் காரணம். சிலர் மஹிந்த ராஜபக்ஷ்வின் அடிவருடிகளாக இருந்துகொண்டு எனக்கெதிராக சாட்சி சொன்னார்கள் இத்தகைய சூழலில் உண்மைகள் வெளிப்படுவது குறைவே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply