அனல் மின் நிலையம் அமைக்க வேண்டாம் : சம்பூர் மக்கள் எதிர்ப்பு

ANAL MINSRAMஉலகின் அழகிய இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மையான இயற்கை வளம் மிக்க ஒரு பிரதேசமே சம்பூர் ஆகும்.அப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட மக்கள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்த நிலையில், பல குடும்பங்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.எனினும், மேலும் சில குடும்பங்கள் கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி, மணற்சேனை போன்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றன.

யுத்தத்தின் போது சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களின் வாழ்விடங்களுக்கு அண்மித்த பகுதியிலேயே அனல் மின் உற்பத்தி நிலையம் அமையப்பெறவுள்ளது.

அனல் மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தின் ஒரு பகுதியானது கொட்டியாரக்குடா கடலினாலும் ஏனைய பகுதிகள் மக்கள் வாழும் பகுதிகளாலும் சூழப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்திற்காக எல்லையிடப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் மக்கள் குடியிருப்புக்கள் அமைந்திருக்கின்றன.

அதேபோல, இப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் மூதூர் நகரம் காணப்படுகின்றது.

குறித்த பகுதியிலிருந்து கடல் வழியாக சுமார் 11 கிலோ மீற்றர் தூரத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறைகளில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பான முறையே அனல் மின்சார உற்பத்தி முறையாகும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

மின் நிலையம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை அதன் நேரடித் தாக்கம் இருக்குமென கணிக்கப்படுகின்றது.

காற்றின் வேகத்திற்கு ஏற்ப நேரடித் தாக்கம் செலுத்தும் தூர எல்லை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அனல் மின்சார நிலையங்களை நிறுவும் போது பொதுவாக மக்கள் வாழும் பகுதியிலிருந்து ஒதுக்குப் புறமான பகுதியே தேர்ந்தெடுக்கப்படுகின்றது. ஆனால், சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாண விடயத்தில் மின்சார நிலையத்திற்கும் மக்களின் வாழிடத்திற்கும் இடையிலான தூரம் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அனல் மின்சார உற்பத்தியினால் காற்று, நீர், நிலம் பாதிக்கப்படுமென்பது வழமை. அவ்வாறு பாதிக்கப்படுமாக இருந்தால் விவசாயம், மீன்பிடி முதலான ஜீவனோபாயம் தடைப்படுவதோடு மக்களது சுகாதாரத்திற்கும் பெரும் சவால் உருவாகும்.

ஒரு தொன் நிலக்கரி எரிக்கப்படும் போது 7186 பவுண்ட் காபனீரொட்சைட் வெளிவருகின்றது. இவ்வாறு வெளிவரும் வாயு சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும். சராசரியாக 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 3.7 மில்லியன் தொன் காபனீரொட்சைட்டை வெளியிடுவதாகக் கணிக்கப்படுகிறது.

இது 161 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுவதற்கு சமமானதாகப் பார்க்கப்படுகின்றது.

எனவே, தமது பிரதேசத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டாம் என்றே மக்கள் கோருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply