மட்டக்களப்பு நகரில் சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட பிரதான தலைமைக்காரியாலயம் உத்தியோக பூர்வமாக கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திரபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சர் முரளீதரனின் மட்டக்களப்பு தேனகம் காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அமைச்சர் முரளீதரன் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாண மக்களுக்கு தற்போது உடனடியாக தேவைப்படுவது அமைதியும், அபிவிருத்தியுமே. இவ்விரண்டையும் மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் நம்பிக்கையை உணர்ந்தவனாக எனது அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுள்ளேன்.
ஜனாதிபதியின் முழுமையான ஆதரவினை பெற்று கிழக்கில் கல்வி, சுகாதாரம் , விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றினை உடன் தீர்த்துவைக்க என்னாலான முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.
இதன் ஆரம்ப பணியாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான தலைமைக்காரியாலயத்தை திறந்து எமது மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை மேற்கொள்வேன்.
கிழக்கில் ரி.எம். வி.பி.யாக கடந்த காலங்களில் இயங்கிய 90 க்கும் மேற்பட்ட காரியாலயங்களை மூடிவிட்டு அக்காரியாலயங்களின் தொகைகளை பாதுகாப்பு கருதி மட்டுப்படுத்தி கிழக்கின் மூன்று மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் பிரிவுதோறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளைகளை ஸ்தாபித்து இனஉறவை வலுப்படுத்தி அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.
மேலும் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக மொழி அறிவை மேம்படுத்தும் பொருட்டு சிங்களவர்கள் தமிழையும் தமிழ் பேசுகின்றவர்கள் சிங்களத்தையும் கற்க தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இதற்கான நிதியினையும் ஒதுக்கவுள்ளேன்.
தமிழ் மொழியை கற்று தமிழ் மொழியிலேயே தற்போது ஜனாதிபதியும் உரையாடி வருகின்றார்.
ஆகவே தமிழ் பேசும் மக்களாகிய நாமும் சிங்களத்தை கற்பது காலத்தின் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply