நெல்லையில் பிரேமலதா மீது 4 பிரிவுகளின்கீழ் போலீசில் வழக்கு

premaநெல்லை டவுண் தேரடி திடலில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது. இதில் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் ஓட்டுக்கு பணம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணம் தர இருக்கின்றன. அவர்கள் பணம் கொடுத்தால் ரூ. 1 லட்சம் கேளுங்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கருணாகரன் உத்தரவுப்படி, நெல்லை தொகுதி தேர்தல் அலுவலரும், உதவி கலெக்டருமான பெர்மி வித்யா, நெல்லை தாசில்தார் மரகதநாதன் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் அதிகாரிகள், பிரேமலதா பேசிய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து நெல்லை டவுண் போலீசில் மரகதநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற எண் 191–ன் கீழ் 16–ல் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான சட்டப்பிரிவுகள் 171 சி., 171 எப்.,(பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை) 188, 123(2) ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. கருணாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பேரவைத் தேர்தலில் எந்த தூண்டுதலும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க மக்களுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

இதற்கிடையே மாநகராட்சி நெல்லை மண்டல தலைவர் மோகன் தலைமையில் அ.தி.மு.க. வக்கீல்கள் பிரேமலதா மீது மேலும் ஒரு புகாரை, உதவி கலெக்டர் பெர்மி வித்யாவிடம் அளித்தனர்.

அதில் “தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வழிப்பாட்டு தலங்களில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கக்கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி பிரேமலதா நெல்லையப்பர் கோவிலில் அவரது கட்சிக்கும், மக்கள் நலக்கூட்டணி கட்சியினருக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரேமலதா செயலானது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சில வீடியோ காட்சிகளையும் உதவி கலெக்டரிடம் அ.தி.மு.க.வினர் வழங்கினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply