தற்கொலை அங்கி வைத்திருந்தவர்! 13 வயதிலிருந்து புலி அமைப்பில் இருந்தவர்!

POMEதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில், சிங்கள மொழிப் பத்திரிகை மற்றும் உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தற்கொலை அங்கியும் இதர வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில், தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 12 கிலோ கிராம் நிறைகொண்ட வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், 9 மில்லிமீற்றர் ரவைகள் அடங்கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதிகளில் 100 ரவைகள் இருந்துள்ளன), கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்கான மின்கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்டைகள் ஐந்தும் அடங்குகின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆயுதங்கள் மீட்கப்பட்ட, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர் ஒரு வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், பொருட்களை ஏற்றியிறக்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை செய்வதாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், குறித்த நபர் வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேகநபர், இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்தே அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து, பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவருடைய மனைவி, அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். இதனையடுத்து சந்தேகநபர் தொடர்பிலான விவரம் அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

சந்தேகநபரின் தந்தையை பொலிஸார், தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருவதாக தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அக்கராயன் பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் 2 மணியளில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. அதன் பின்னர் சாவகச்சேரிக்கு, மாலையில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது.

சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார்.

அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரியவருகின்றது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. இவ்வாறு மீட்கப்பட்ட இந்தத் தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும், அவ்வளவு பழையன இல்லை என்றும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இவை, ஏதாவது பிரதேசத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டனவா, சந்தேகநபருக்கு இப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர், தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்து கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply