பாரீஸ் தாக்குதல் குற்றவாளியை பிரான்ஸுக்கு அனுப்புகிறது பெல்ஜியம்
பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை பிரான்ஸுக்கு அனுப்ப பெல்ஜியம் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த நவம்பர் மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை (26), நான்கு மாதத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போலீஸார் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கைது செய்தனர்.அவரது கைதுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு, பிரஸ்ஸெல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் 3 ஐ.எஸ். மனித வெடிகுண்டுகள் நிகழ்த்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அப்தெஸ்லாமுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.எனினும், பிரஸ்ஸெல்ஸ் தாக்குதல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அப்தெல்ஸாம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் அப்தெல்ஸாமின் வழக்குரைஞர் செட்ரிக் மோய்ஸீ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பாரீஸ் தாக்குதல் குறித்த விசாரணைக்காக பிரான்ஸுக்கு தன்னை அழைத்துச் செல்ல அப்தெஸ்லாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணையின்போது பிரான்ஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அப்தெஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் அவர்.இதையடுத்து, இன்னும் 10 நாள்களுக்குள் அப்தெஸ்லாம் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என பிரான்ஸ் சட்டத் துறை அமைச்சர் ஜான்-ஜாக் உர்வோஸ் தெரிவித்தார்.பிரான்ஸ் அனுப்பப்பட்டாலும், பிரஸ்ஸெல்ஸ் தாக்குதல் குறித்து அப்தெஸ்லாமிடம் தொடர்ந்து விசாரணை நடத்த பெல்ஜியம் அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply