தீவிரவாதி என்று அறிவிக்கவிடாமல் மசூத் அசாருக்கு ஆதரவு அளிப்பதா? சீனாவுக்கு இந்தியா கண்டனம்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி ஈடுபட்டனர். 4 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களை எதிர்த்து சண்டையிட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ராவுப் அஸ்கார் மற்றும் அஷ்பாக், காசிம் என்று இந்தியா கண்டறிந்தது. இது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் முறையிட்டது.
இந்தியாவின் முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கடந்த 30-ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் சீனா இதை ஏற்கவில்லை. மசூத் அசார் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நினைத்ததை சாதித்து விட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் இந்த மறுப்புரிமை அதிகாரம் (வீட்டோ) உள்ளது. அதை பயன்படுத்தி சீனா, மசூத் அசார் மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சுழற்சி முறையில் சீனா தலைமை பதவிக்கு வந்துள்ளது. சீனாவின் ஐ.நா. சபை நிரந்தர பிரதிநிதியான லியு ஜியி, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து, பொருளாதார தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “தீவிரவாதி என அறிவித்து பொருளாதார தடை விதிப்பதற்கான தகுதியை மசூத் அசார் கொண்டிருக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்றால் அது நிறுவனமாக இருந்தாலும், தனி நபர்களாக இருந்தாலும் அதற்கான தேவைகளை (தகுதிகளை) கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் தடை விதிக்கப்பட வேண்டிய நிறுவனமோ, தனி நபரோ அதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கின்றனரா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு உண்டு” என பதில் அளித்தார்.
தொடர்ந்து, “அப்படியென்றால் மசூத் அசார் எந்த வகையில் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு தகுதி குறைவாக உள்ளார்?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அது கவுன்சில் நிர்ணயித்துள்ள தகுதிகள்” என கூறினாரே தவிர விளக்கம் அளிக்க வில்லை.
சீனாவின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் இதுபற்றி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “சீனாவின் கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. தீவிரவாதத்தை வீழ்த்துவதற்கு தேவையான உறுதியான நடவடிக்கையை சர்வ தேச சமூகம் காட்டவேண்டும். ஆனால் இந்த செயல்பாடு அதை பிரதிபலிக்கவில்லை” என கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply