பாகிஸ்தான் பிரதமர் உள்பட உலக நாடுகளின் 140 அரசியல் தலைவர்கள் பனாமா நாட்டில் பணம், சொத்து பதுக்கல்

manyகருப்பு பணத்தை சுவிஸ்(சுவிட்சர்லாந்து) நாட்டு வங்கிகளில் பதுக்குவதுதான் இதுவரை உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. அந்நாட்டு வங்கிகளில் வைத்துள்ள வெளிநாட்டு பிரமுகர்களின் வங்கிக் கணக்குகள் ராணுவ ரகசியத்தை விட பாதுகாப்பானது என்று கூறப்படுவதால் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் ஏராளம். இதேபோல் மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.

 

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.

 

இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் 140 அரசியல் தலைவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.

 

இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புதினின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் கூட அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.

 

இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பிரபல நடிகர்-நடிகைகள் உள்பட 500 முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த ஆவணங்கள் அனைத்துமே, 35-க்கும் மேலான நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள பனாமாவைச் சேர்ந்த மொசாக் போன்செகா என்னும் சட்ட நிறுவனத்தின் வழியாக கசிந்து உள்ளது.

 

இந்த ஆவணங்களை கசியவிட்டது சட்டப்படி குற்றம் என்றும் இது பனாமா நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் பனாமாநாட்டின் சட்ட நிறுவன தலைவர்களில் ஒருவரான ரோமன் போன்செகா குறிப்பிட்டார்.

 

பனாமா அதிபர் ஜூவன் கார்லோஸ் வெரெலா இதுபற்றி கூறுகையில், “வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் எங்களுடன் சில நாடுகளால் போட்டி போட முடியவில்லை. அவைதான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. எனினும் எங்கள் நாட்டில், மறைமுகமான எந்த ஒப்பந்தங்களுக்கும் இடமில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply