சிரியாவில் ஆளில்லா விமான தாக்குதல்: அல்கொய்தா தலைவர் அபு பிராஸ் பலி
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதைப்போல அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் சமீபத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்தது. இதில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் சிரிய பிரிவான நுஸ்ரா முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அபு பிராஸ் கொல்லப்பட்டார். அவருடன் ஏராளமான கூட்டாளிகளும் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதை உறுதிப்படுத்தியுள்ள சிரிய மனித உரிமைகள் ஆணையம், அபு பிராஸ் ரஷியா அல்லது சிரியாவின் ஆளில்லா தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தான் அபு பிராஸ் இறந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சிரிய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த அபு பிராஸ், பின்னர் அதிலிருந்து விலகி அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்து, சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றார். 1980-களில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இவர், அல்கொய்தா தலைவர் பின்லேடனுடனும் பணியாற்றி உள்ளார். பின்னர் சிரியாவில் நுஸ்ரா முன்னணியை நிறுவி, அதன் கொள்கைகளை வகுக்கும் சரா குழுவில் மூத்த தலைவராக விளங்கி வந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply