தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.
இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply