பாரிஸ், பெல்ஜியம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய அதிமுக்கிய குற்றவாளி கைது?
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இசையரங்கம், உணவு விடுதி, கால்பந்தாட்ட மைதானம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 130 பேரும், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசல்ஸ் நகரில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேரும் பலியாகினர்.
பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன் என கருதப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளரான முஹம்மது அப்ரினி என்பவனை பிரான்ஸ் போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில், புருசல்ஸ் நகரத்தில் உள்ள சவான்டெம் விமான நிலையத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பெல்ஜியம் நாட்டு போலீசார், குண்டுவெடிப்புக்கு சில நிமிடங்கள் முன்னதாக அடர்ந்த நிறத்தில் தொப்பி அணிந்த ஒரு மர்மநபர் அங்கு நடமாடிய காட்சிகளை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்தனர்.
பின்னர், புருசெல்ஸ் நகரில் உள்ள மயெல்பீக் சுரங்கப்பாதை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலும் அதே தொப்பி ஆசாமி அங்கு நடமாடியதற்கான தடயங்கள் போலீசாருக்கு கிடைத்தன. இதற்கு முன்னதாக, சவான்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த மூன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்ததாகவும், அவர்களில் இருவர் வெடித்துச் சிதறியதாகவும், ஒருவன் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் உளவுத்துறை தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்த தகவல்களை வைத்து புலனாய்வு செய்தபோது, தொப்பி அணிந்த அந்த மர்ம நபர்மீது போலீசாரின் சந்தேகம் வலுவடைந்தது. அவனைப்பற்றி நடத்தப்பட்ட தீவிர விசாரணயில், சந்தேகத்துக்குரிய அந்நபரின் பெயர் முஹம்மது அப்ரினி என்பதும், பாரிஸ் குண்டுவெடிப்பு வழக்கில் பிடிபட்ட ஐ.எஸ். தீவிரவாதி அப்டெல் ஹமித் அபவுட் மற்றும் அவனது கூட்டாளிகளான சாலா அப்தெஸலாம் மற்றும் பிராஹிம் அப்தெஸலாம் ஆகியோருடன் அவன் மிகநெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும் தெளிவாக தெரியவந்தது.
மொராக்கோ நாட்டை பூர்விகமாக கொண்டிருந்த முஹம்மது அப்ரினி(31) மீது பெல்ஜியம் காவல் நிலையங்களில் சில குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, கடந்த 2014-ம் ஆண்டு சிரியாவுக்கு சென்று அங்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து, பயிற்சிபெற்ற முஹம்மது அப்ரினி, அங்கிருந்தவாறு இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹம் நகருக்கு பலமுறை சென்றுள்ளான். அங்குள்ள தலைமறைவு தீவிரவாதிகள் பலரை சந்தித்துப் பேசியுள்ளான் என ஐரோப்பிய உளவுத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், பாரிஸ் தாக்குதலை முன்நின்று நடத்திய சாலா அப்தெஸ்லாமுடன் அவன் 36 மணிநேரம் பயணித்து பாரிஸ் நகருக்கு சென்றதற்கான ஆதாரமும் கிடைத்தது. இதையடுத்து, புருசல்ஸ் நகரில் உள்ள அன்டெர்லெச்ட் பகுதியில் உள்ள சந்தேகத்துக்குரிய வீடுகளில் எல்லாம் நேற்று சுமார் பத்துமணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், சில தீவிரவாதிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களில் பாரிஸ் மற்றும் புருசல்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீசாரால் தேடப்பட்டுவந்த மர்ம நபரான முஹம்மது அப்ரினியும் பிடிபட்டதாக தெரியவந்துள்ளது. அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், மேற்படி விசாரணையில் பாரிஸ் நகர போலீசாரும் ஈடுபட்டு வருவதால், இந்த விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக மேற்கொண்டு எந்த தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு அளிக்க புருசல்ஸ் போலீசார் மறுத்து விட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply