அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு குறைக்கப்பட்டு தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. 2011ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கறவை மாடு, மகப்பேறு நிதியுதவி, திருமண நிதியுதவி, முதியோர் நிதி, மடிக்கணினி, பள்ளி- கல்லூரி மாணவர் விடுதி உணவுக்கான தொகை உயர்வு, உழவர் பாதுகாப்பு திட்டம், காப்பீட்டு திட்டம், ஜவுளி பூங்காக்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை, 25 சதவீத மானியக்கடன், மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் வசதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
தற்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது பற்றி பலர் பேசி வருகின்றனர். மதுவிலக்கு பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுவது வினோதமாக இருக்கிறது. மதுவிலக்கு பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் கருணாநிதி பேசக்கூடாது, தி.மு.க.வினர் பேசக்கூடாது. மக்களை அதிகம் குடிக்க வைத்தது தி.மு.க. தான்.
எனது நெஞ்சார்ந்த குறிக்கோள், பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். ஆனால், மதுவிலக்கை பற்றி தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவெடுப்பேன்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தால் நம்ப முடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகிறார். தி.மு.க. இந்த தேர்தலில் ஜெயிக்கப்போவதில்லை என்று கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கைப் பற்றி பேசி வருகிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் பற்றி குறிப்பிட்டால் மக்கள் நம்பக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வாக்காளப் பெருமக்களே, எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து, எந்த ஒரு உறுதிமொழியையும் செயல்படுத்த முடியுமா? என்று சிந்தித்து அதன் பிறகே அந்த உறுதியை இந்த ஜெயலலிதா வழங்குவார் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பூரண மதுவிலக்குதான் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், ஒரே கையெழுத்தில் அதனைக் கொண்டு வருவது என்பது இயலாது. இதை படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும்.
எனது தலைமையிலான அ.தி.மு.க. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
முதலில் சில்லரை மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதன்பின்னர் சில்லரை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் குறைக்கப்படும். குடியால் பாதிக்கப்படுவோரை மீட்டு சிகிச்சை அளிக்க மீட்பு நிலையங்கள் உருவாக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளின் முடிவில் பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply