ஆராய்ச்சி மாணவர் படுகொலை: எகிப்துடனான தூதரக உறவை முறித்துக்கொண்ட இத்தாலி

italyஇத்தாலியை சேர்ந்த கியுலியோ ரெஜினி(28) இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள கிர்டன் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி (பி.எச்.டி.) படிப்பு படித்து வந்தார். இதுதொடர்பாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை திரட்டுவதற்காக எகிப்து நாட்டுக்கு சென்றிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சில மர்ம நபர்களால் ரெஜினி கடத்தப்பட்டார்.அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்ட நிலையில், எகிப்து தலைநகரான கெய்ரோவை அலெக்ஸாண்ட்ரா நகருடன் இணைக்கும் நெடுஞ்சாலை ஓரமாக கிடந்த ஒரு கால்வாயில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு, நிர்வாண நிலையில் ரெஜினியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.

எகிப்து நாட்டு தொழிற்சங்கங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவரை எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடத்திச் சென்று, கொன்றிருக்கலாம் என சந்தேம் எழுந்தது.

ரெஜினியின் மரணம் உலகளாவிய அளவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்களிடையே அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இந்த மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தக்கோரி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ரெஜினியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் அணுஅணுவாக சித்ரவதை செய்து கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் பல தடயங்கள் காணப்பட்டன.

தடிகளால் தாக்கியும், அடித்தும், உதைத்தும், கத்தியால் குத்தியும், பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பி மற்றும் சிகரெட்டால் சூடு வைத்தும் அவரை துடிதுடிக்க வைத்துக் கொன்றதாகவும், மார்பெலும்பு, கழுத்து, கை, கால், விரல்கள், இடுப்பு என இருபதுக்கும் ஏற்பட்ட பகுதிகளில் அவரது எலும்புகளை அடித்து நொறுக்கியும், இறுதியாக மண்டை ஓடு பிளக்கும் வகையில் கொடூரமாக தாக்கியும் கடத்தல்காரர்களால் அவர் கொல்லப்பட்டதாக இத்தாலியில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இதற்கு காரணமான எகிப்து அரசின் உளவுத்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தாலி அரசு கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தி வருகின்றது. ஆனால், பழியை அந்நாட்டின் எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்மீது போட்டுவரும் இத்தாலி அரசு, பெயரளவுக்கு மட்டும் சிலரை கைது செய்துள்ளது.

பலமுறை வலியுறுத்தியும், இந்த படுகொலை தொடர்பாக தங்கள் நாட்டு போலீசார் இதுவரை நடத்தியுள்ள புலன் விசாரணை அறிக்கையையும் இத்தாலி அரசுக்கு வழங்காமல் எகிப்து அரசு இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் எகிப்துடனான தூதரக உறவுகளை இத்தாலி நேற்று முறித்துக் கொண்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தங்கள் நாட்டின் உயர் தூதரை இத்தாலி நேற்று திரும்பப் பெற்றுக் கொண்டது. இதற்கிடையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக எகிப்து அரசு வழங்கிவரும் வெளிப்படையான ஒத்துழைப்புக்கு மாறுபட்ட வகையில் இத்தாலியின் நடவடிக்கை அமைந்துள்ளதாக எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி சமேஷ் ஷவுக்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply