மஹிந்தவிடமிருந்து வெளியேறியதானாலேயே ரிசாத் தாக்கப்படுகிறார் : விமலசார தேரர்
மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிசாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன என வடக்கு, கிழக்கு பிரதான சங்க சபா தலைவர் கௌரவத்துக்குரிய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.வவுனியா மகா போதியில் தேரரின் தலைமையிலான பௌத்த தூதுக் குழுவினரை, அமைச்சர் றிசாத் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால், அவரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். றிசாத் பாராளுமன்றத்துக்குச் சென்ற நாள் தொடக்கம் எமக்கு சேவையாற்றி வருபவர்.
யுத்த சூழ்நிலையில் நாங்கள் பட்ட கஷ்டங்களை தீர்ப்பதற்கு அவர் பெரிதும் கஷ்டப்பட்டார். சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமின்றி அவர் உதவி வருவதால், நாம் வாழ்கின்ற இந்தப் பகுதியில் யுத்த காலத்தில் அடிக்கடி துப்பாக்கி வேட்டுக்களும், கொலைகளும் இடம்பெற்று வந்தபோதும், தனது உயிரைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், இங்கு வந்து பயத்திலே வாழ்ந்துகொண்டிருந்த எங்களுக்கு தைரியம் ஊட்டி உதவிகளையும் செய்தவர்.
சமாதான காலத்திலும் எமது விகாரைகளைப் புனரமைப்பதற்கும், இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அவரே உதவி வருகின்றார். வவுனியாவைச் சேர்ந்த எந்த அரசியல்வாதியும் எமது விகாரைகளை புனரமைக்க ஐந்து சதமேனும் தரவில்லை. ஆனால் றிசாத் அதிகமாக உதவியிருக்கிறார்.
இப்போது இனவாதம் பேசும் இயக்கங்கள், நாங்கள் கஷ்டப்பட்ட போதும் உதவ முன்வரவில்லை. றிசாத் மீது வெறுமனே குற்றச்சாட்டுக்களை மட்டுமே சுமத்தி வருவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இனவாத இயக்கங்கள் பௌத்த கருமத்தையும் , புத்தர் போதித்த பண்புகளையும் மீறி நடக்கின்றனர். இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் வவுனியா, உளுக்குளம் ஸ்ரீ சுமணராப்பதி, சுமணதிஸ்ஸ தேரோ, வெலி ஓயா பௌத்த விகாராதிபதிகளும் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகவும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply