சுப்ரீம் கோர்ட்டு மூலமாக கச்சத்தீவு மீட்கப்படுவது உறுதி: அருப்புக்கோட்டை பிரசாரத்தில் ஜெயலலிதா பேச்சு

jeyaஅருப்புக்கோட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), ராஜபாளையம், திருச்சுழி, சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:-

2011 தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களை; நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத பல திட்டங்களை நான் செயல்படுத்தி உள்ளேன்.

இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத இன்னும் ஏராளமான திட்டங்களை உங்களுக்காக செய்வேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன்.

பாக் நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன்.

ஆனால், முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, மீனவர்கள் பேராசையினால் தான் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர் என்று மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி படகுகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருந்தவர் தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தான், 1974-ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை. அப்போதே இது தொடர்பாக கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரேயானால் உச்சநீதிமன்றம் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்க முடியும். பின்னர், வாதங்களின் மூலம் நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டியிருக்க முடியும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் நிலை எழாமலே இருந்திருக்கும். ஆனால், கருணாநிதி அவ்வாறு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960-க்கு முன்பே கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க இந்திய அரசு முயன்ற போது அப்போதைய குடியரசுத் தலைவரின் வினாவினை அடுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பளித்தது. என்ன அந்தத் தீர்ப்பு?

இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை அன்னிய நாட்டுக்கு கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. இதனால், பெருபாரி அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கப்படுவது தடுக்கப்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாகவே பெருபாரி இன்றும் உள்ளது.

இவ்வாறான ஒரு தீர்ப்பு உள்ள நிலையிலும், அந்த அடிப்படையில் வழக்கு தொடுப்பதை கருணாநிதி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? அதற்கு கருணாநிதி தான் பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம் கச்சத்தீவு பிரச்சினையில் தமிழகத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் துரோகம் இழைத்தவர் தான் கருணாநிதி. கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

2008-ம் ஆண்டு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை நான் தாக்கல் செய்தேன். கச்சத்தீவினை தாரை வார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று நான் தாக்கல் செய்த வழக்கின் மீது உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பியது.

கச்சத்தீவு பிரச்சினையில், தமிழக மீனவர் பிரச்சினையில் உண்மையிலேயே கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், என்ன செய்திருக்க வேண்டும்? எனது கோரிக்கையை ஆதரித்து அதற்கு ஆதரவாக தமிழக அரசு எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்திருக்க வேண்டாமா? ஆனால், கருணாநிதி அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுக்கவில்லை. மாறாக கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா? தமிழ்நாடு அரசு, மத்திய அரசு என்ன எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்து விட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தவர் தான் கருணாநிதி.

சரி. மத்திய அரசில் அங்கம் வகித்த கருணாநிதி, இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டாமா? அதையும் செய்யவில்லை. மத்திய அரசையே தாங்கிப் பிடித்தது மட்டுமல்லாமல் கருணாநிதியின் அறிவுரையை கேட்டு மத்திய அரசு நடப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தாரே!

கச்சச்தீவு பிரச்சினைக்கு மன்மோகன்சிங், கருணாநிதியிடம் அறிவுரை கேட்டாரா? இல்லையா? 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்து, நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது.

இது தான் மத்திய அரசுக்கு, கருணாநிதி வழங்கிய அறிவுரையா? இதற்கும் கருணாநிதி பதில் அளிக்க வேண்டும். 2011-ம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய் துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என ஒரு தீர்மானத்தை சட்டப் பேரவையில் நான் கொண்டு வந்து நிறைவேற்றிய காரணத்தால், தமிழ்நாடு அரசு தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டுள்ளது.

நான், சட்டப் பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்தின் காரணமாக, நான் நிறைவேற்றிய தீர்மானத்தின் காரணமாக, இன்று இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்க்க உறுதுணையாக இருந்த கருணாநிதி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி, பின்னர் மக்களை ஏமாற்ற உச்சநீதிமன்றத்தில் தானும் ஒரு வழக்கை தொடர்ந்தார்.

இவ்வாறு, அவர் வழக்கு தாக்கல் செய்தது ஒரு கபட நாடகம் என்பதால், அதைப் பற்றி கருணாநிதியே முற்றிலும் மறந்துவிட்டார். மறந்துவிட்டு, தற்போதைய தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதற்கும் உதவாத, ஒன்றுக்கும் உதவாத ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளார். அவரே வழக்கு போட்டுவிட்டு, அவரே மறந்துவிட்டார்.

கச்சத்தீவுப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர்கள் பயன் பெற வேண்டும் என்பது தான் என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு. எனவே தான் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கொழும்பு நகரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்பட்டதுடன், தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் மீனவர்கள் படகுகளுடன் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இருப்பினும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதிபட இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply