ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது
மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 47 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்றுபேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், அங்கிருந்து முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் பல ஜன்னல்கள் உடைந்தன. இந்த வெடிகுண்டு தாக்குதல் உள்நோக்கத்துடன் நடந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தலைமை தூதர் ரவீஷ் குமார் குண்டுவெடிப்பு நடைபெற்ற குருத்வாராவை சென்று பார்வையிட்டார். எஸ்சென் நகர மேயர் தாமஸ் குஃபென் மற்றும் நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர், மேற்படி தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மேயர் தாமஸ் குஃபென் அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply