தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அவசர வேண்டுகோள்!

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவசர வேண்டுகோளை, சம்பூர் அனல்மின் நிலையத்துக்காக போராடும் பசுமை, திருகோணமாலை அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நிலக்கரி அனல் மின்னிலையத்திற்கெதிரான போராட்டமும் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினதும், கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சரினதும் நிலக்கரி அனல் மின் நிலையத்தைப் பற்றி, பேசியதாக வெளிவரும் செய்திகள் சிறிது அசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அனல்மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான, மக்களின் கவலைகளை இந்தியாவுடனும் இலங்கையுடனும் பேசவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு இனத்தினையும் இப்பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்கிற வகையில் இப்பிரச்சனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாழாவிருக்க முடியாது.

அக்கட்சிக்கு எமது மக்களின் நாளாந்த வாழ்வாதார சிக்கல்கள் தொடர்பாக, நீண்ட பெரும் பொறுப்புள்ளது. யாரோ மூன்றாம் நபர் ஒருவரைப்போல ‘மக்கள் பிரச்சனை இருக்கிறது’ என்று சொல்கிறார்கள் என்று மென்போக்காகச் சொல்லி விட்டு, வெளியே சென்று விட முடியாது. தகுந்த நிபுணர்களை நியமித்து, ஏன் இந்த அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பில் மக்கள் போராடுகிறார்கள்?

அதனது சாதக பாதகம் என்ன? இந்நிலையம் மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தப்போகிறது? இந்த நாட்டின் சுற்றுச் சூழலில் இது எவ்வகையான தாக்கத்தைச் செலுத்தும்?

இப்பகுதியின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வகையான தாக்கம் செலுத்தப்படும்? இந்நாட்டின் பொருளாதாரத்தில் இது எவ்வகையான தாக்கத்தைச் செலுத்தப்போகிறது? என்று ஆராய வேண்டிய தேவை இக்கட்சிக்கு உள்ளது.

இந்தியா என்றவுடன் அதனை ஆதரித்து கருத்துச் சொல்வதும், மக்கள் தீவிரமாக போராட முற்பட்டதும் அதனை பரிசீலிக்கச் சொல்லி கோருவதும் சரியான முறையாகாது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக, இரண்டு முனைகளில் இது தொடர்பான வேலைகளைத் தொடங்க வேண்டும்.

தகுதிவாய்ந்த நிபுணர் குழுவொன்றை நியமித்து நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் தொடர்பிலும், தற்போதைய எமது பகுதியில் அமைய இருக்கும் நிலக்கரி அனல் மின் நிலையம் தொடர்பிலும் முழுமையான நிபுணத்துவ அறிக்கையை கோருதலும் அதனை வெளியிட்டு பகிரங்க விவாதமொன்றை ஏற்படுத்தலும்.

போராடும் ‘அனல் மின் நிலையத்திற்கெதிரான மக்கள் போராட்டக்குழு’, பசுமைத் திருக்கோணமலை, உள்ளுார் அரசியல் தலைமைகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் எமது பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற அனைவருடனும் பகிரங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மக்களின் கருத்துக்களை செவிமடுத்தல். இப்போராட்டத்தின் பின்னாலுள்ள நியாயத்தையும் பயத்தையும் முறையாக விளங்கிக் கொள்ளல்.

இந்த இரண்டு வேலைத்திட்டங்களின் இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முடிவை மக்களுக்கு தெரியப்படுத்துவதன் ஊடாக, தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று இத்தால் பகிரங்கமாக கோரிக்கையை முன் வைக்கின்றோம். இவ் அனல் மின் நிலையம் தொடர்பான எமது நியாயமான கேள்விகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

இவ்விடயங்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும். அனல்மின் நிலையத்திற்கென கையகப்படுத்தப்பட்ட 515 ஏக்கர் நிலப்பகுதிக்குள் அமையும் 200 ஏக்கர் வயல் நிலங்கள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடென்ன?

இப்பகுதிக்குள் அமைந்துள்ள இவ்வயல் நிலங்களிற்று நீரைப்பாய்ச்சும் பிரதான குளங்கள் தொடர்பில் உங்கள் நிலையென்ன?

கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதியை நம்பி வாழும் பழங்குடி மக்களின் எதிரகால வாழ்வாதாரம் பற்றிய விடயங்களில் உங்களது நிலைப்பாடென்ன?

கடற்கரைச்சேனை, சம்பூர் , சந்தோசபுரம் கிராமங்களின் மக்களின் வாழ்விடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளனவே இது தொடர்பில் என்ன நிலைப்பாடு?

நிலக்கரியை இறக்கவும், கடல் நீரை உள்ளெடுக்கவும் என கடற்கரைச்சேனை தொடக்கம் ஷெல் குடா வரையும் கடற்கரைப்பகுதி முழுவதும் கையகப்படுத்தப்படுத்தப்படுவதன் மூலம் இப்பகுதியை தளமாகக் கொண்ட மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் என்ன நிலைப்பாடு?

மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சூழல் தாக்க ஆய்வு அறிக்கையை மையமாகக் கொண்டு தற்போது மக்கள் அனைவரும் மீளக்குடியமர்ந்த பின்பு மின் நிலையத்தை ஆரம்பிக்க நினைக்கும் மின்சார சபையின் கபடத்தனம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடென்ன?

சந்தோசபுரம் கிறவல்குழி சிவசக்தி வித்தியாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதிக்குள் அடங்குவது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் நிலைப்பாடென்ன?

எதிர்கால சுற்றுச்சூழல் தாக்கத்தை தாண்டி எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையை எதிர்த்து போராடும் மக்களைப் பார்த்து நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதன் பின்னாலுள்ள நுண் அரசியலை எமக்கு தெளிவு படுத்த வேண்டும்.

எமது மக்கள் போராடுவது தமது இருப்பிற்காக மட்டும் அல்ல, மாறாக மேலே குறிப்பிடப்பட்ட மதிப்பிற்குரிய இரு தலைவர்களுக்கும் அவர்களது குடும்பங்களிற்கும் ஆதரவாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதனையும் இங்கு நாங்கள் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply