சம்பந்தனும் விக்கியும் தவறான பாதையில் :அமைச்சர் சம்பிக்க ரணவக்க
வென்றெடுத்த ஜனநாயகத்தை குழப்பும் வகையிலும் சர்வதேச மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே வடமாகாண சபையினதும், விக்கினேஸ்வரனின தும் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தமது தவறான பாதையில் இருந்து மாறி நாட்டை ஐக்கியப்படுத்தும் கொள்கையில் இவர்கள் செயற்பட வேண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். வடமாகாண சபையின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.வடமாகாண சபையின் அண்மைக்கால செயற்பாடுகள் நாட்டை குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:-
யுத்தத்தின் மூலம் நாட்டில் பிரிவினை வாதம் தலைதூக்கிய நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பிளவுபடவிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த போதிலும் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைவாத கொள்கையில் செயற்பட்டனர். எனினும் முன்னைய குடும்ப ஆட்சியில் மேற்கொண்ட சர்வாதிகார ஆட்சிமுறையும் அடக்குமுறையும் அனைத்து தரப்பையும் அதிருப்திக்குள்ளாகியது. அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் தலைமைகள் தமது பிரிவினைவாத கொள்கையில் இருந்து விடுபட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக மாற்றம் என்ற நிலைப்பாட்டில் ஒன்றிணைந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவையும் பெற்று ஒட்டுமொத்த இலங்கையர்களின் மாற்றமான ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம். அதில் தமிழ் அரசியல் தலைமைகளும் பங்குகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒன்றாகவே கருதுகின்றோம். எனினும் இப்போது சமஷ்டி என்ற பெயரில் தமிழ் தலைமைகள் முன்னெடுக்க முயற்சிக்கும் பிரிவினைவாத பாதைக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மொழிசார் பிராந்தியமாகவோ அல்லது இனம் சார் பிரந்தியமாகவோ பிரிக்க முடியாது. இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் சகல மக்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு. வடக்கில் தமிழர்கள் மட்டுமே வாழமுடியும் என்ற தீமானம் எடுப்பதாயின் தெற்கில் வாழும் தமிழர்களின் நிலைமை என்னவாகும் என்பதையும் தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும். அவர்களின் காணிகளில் அவர்களை குடியமர்த்த வேண்டும். அந்த நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. எனினும் இன்று விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண சபையின் நோக்கம் மீண்டும் பிரிவினையின் பக்கம் சார்ந்து செல்கின்றது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தாது நாட்டை குழப்பும் வகையில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
வடமாகாண சபையும் விக்கினேஸ்வரனும் பயணிக்கும் பாதை தவறானது. இவர்களின் பாதையை மாற்றிக்கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்தது சர்வதேச பிரிவினைவாத கொள்கையிலும்இ புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல்களை கையாண்டும் இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் இவர்களுக்கு எச்சரிக்கின்றது. வடக்கு மக்களுக்கு உரிய வகையில் உரிமைகள் பகிரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பலப்படுத்தப்படும். அதை விடுத்து சட்டத்துக்கும் அரசியல் அமைப்பிற்கும் முரணான வகையில் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply