மஹிந்தவிற்கே மீண்டும் புலிகளின் உதவி தேவைப்படுகின்றது : ரில்வின் சில்வா
புலிகளின் கதைகளை கூறியும் இனவாத கருத்துகளை முன்வைத்தும் மக்களின் சாதாரண வாழ்கையை அழித்துவிடக்கூடாது. அரசியல் சுயநலத்திற்காக பிரிவினைவாதத்தை கையிலெடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.மஹிந்த ராஜபக்ஷவிற்கே மீண்டும் புலிகளின் உதவி தேவைப்படுகின்றது.அதனாலேயே கொல்லப்பட்ட புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கின்றார் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியது.நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்வதாக மஹிந்த தரப்பு குற்றம் சுமத்திவரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவிய போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:-
வடக்கில் பிரிவினைவாதம் தலைதூக்க ஆரம்பிக்கின்றது என்றால் இந்த அரசாங்கமும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தமாகும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதாகவும் கூறி அவர்களின் மனங்களை வென்றெடுத்தனர். ஆனால் இன்று தமிழ் மக்களும் அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை. எனினும் வடக்கின் அரசியல் கட்சிகள் தமது நோக்கங்களை நிறைவுசெய்யும் நோக்கத்திலும் புலம்பெயர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமே செயற்பட்டு வருகின்றன. அதற்காகவே பிரிவினைவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.
எனினும் விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் உருவாகும் நிலைமையோ அல்லது நாட்டை பிரிக்கும் சந்தர்ப்பமோ இனி ஏற்படப் போவதில்லை. மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். இன்று அரசியலில் அனாதைகளாகியுள்ள மஹிந்த தரப்பினர் தமது அரசியல் பயணத்தை பலமாக முன்னெடுக்கவே மீண்டும் புலிக்கதைகளை கூறி இனவாதத்தை கையில் எடுக்கின்றனர். அன்றும் மஹிந்தவின் அரசியல் பயணத்தில் புலிகளின் பங்கு அதிகமாக இருந்தது. புலிகளை வைத்தே அவரது பிரசாரங்கள் அமைந்தது.
இன்றும் புலிகள் கொல்லப்பட்டாலும் அவர்களின் செயற்பாடுகளை வைத்தே அரசியலை முன்னெடுக்க பார்க்கின்றார். இறுதி யுத்தத்தில் புலிகளை கொன்று வெற்றியை கொண்டாடிய மஹிந்த மற்றும் அவரது அணியினர் இன்று மீண்டும் கொல்லப்பட்ட புலிகளுக்கு உயிர் கொடுத்து அதன்மூலம் தமது இனவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். அதற்காகவே இன்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவர்களின் கருத்துகளை கேட்டு மக்கள் குழப்பத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கான சரியான தலைமையை இனிமேல் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply