அணு ஆயுத சோதனையை நிறுத்துவது தொடர்பான வடகொரியாவின் நிபந்தனையை ஏற்க ஒபாமா மறுப்பு

Obamaகிழக்காசிய கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும், உலக நாடுகளின் எதிர்ப்பையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்த வடகொரியா, கடந்த ஜனவரி மாதம் முதல்முறையாக அணுகுண்டைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்து உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம், ஐ.நா. சபை அந்த நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வடகொரியா கைவிடவில்லை.

இந்தநிலையில் நேற்று முன் தினம்(சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அந்த நாட்டின் கே.சி.என்.ஏ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் வழிநடத்துதலில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது. இது ஆத்திரமூட்டும் செயல் என கூறி அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி ரி சு யாங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வருகிற கூட்டுப் போர் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டால், நாங்களும் எங்கள் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்வோம். எங்களை தற்காத்து கொள்வதற்காக நாங்கள் அணு ஆயுத திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்காதான் காரணம்.

தென்கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி விட்டால் பேச்சு வார்த்தைக்கான கதவு திறக்கும். பதற்றம் தணியும். கூட்டுப் போர் பயிற்சி சிலகாலத்துக்கோ, ஆண்டுகளுக்கோ நிறுத்தப்பட்டால், இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். இது ஒட்டுமொத்த உலகத்துக்கே நல்லதாக அமையும். மற்றபடி. சர்வதேச தடைகளுக்கு எல்லாம் வடகொரியா ஒருபோதும் அடிபணியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது கருத்து அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்ட நிர்பந்தமாகவே பார்க்கப்படும் நிலையில் இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒபாமா அங்குள்ள ஹனோவர் நகரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற வாக்குறுதிக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுத்துவிட முடியாது. உண்மையாகவே, வடகொரியாவுக்கு அமைதிமீது அக்கறை இருக்குமானால், நாங்கள் ஏற்கனவே கூறிவருவதைப்போல் அணு ஆயுதப் பரவலை அந்நாடு கைவிட வேண்டும். அதன்பிறகே, வடகொரியாவுடனான சமரசம் தொடர்பான அணுகுமுறையை நாங்கள் பின்பற்ற முடியும்.

ஆனால், ஆத்திரமூட்டும் செயல்களை செய்துகொண்டே, சமரசம் தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடுவது வடகொரியாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. அதை எல்லாம் கடந்து ஆக்கப்பூர்வமான வகையில் ஏதாவது செய்வது தொடர்பாக அவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதுவரையில், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காகவும், எங்களின் நட்புநாடுகளின் பாதுகாப்புக்காகவும் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏவுகணை தடுப்பு தொடர்பான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா துணை நிற்கும்.

இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply