ஹிலரி ஆணாக இருந்திருந்தால் 5% வாக்குகள் பெறமாட்டார்: ட்ரம்ப்
அமெரிக்காவின் ஐந்து வடகிழக்கு மாகாணங்களில் ஆகப்பெரிய வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம், தனது கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.தன்னை ஒரு குத்துச்சண்டை வீர்ராக வர்ணித்துக்கொண்டவர், மல்யுத்த மேடையில் எழமுடியாத அளவுக்கு எதிரியை அடித்து வீழ்த்திவிட்டதாகவும், இனி நடுவரின் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார். பெரும் கோடீஸ்வரனான ட்ரம்ப், அதிபர் தேர்தலில் தான் மோதக்கூடிய சாத்தியமுள்ள எதிர்க்கட்சி வேட்பாளரை நேரடியாக திட்ட ஆரம்பித்திருக்கிறார். “நரித்தனமிக்க ஹிலாரி” என்று அவரை அழைத்தார்.
“ஹிலரியிடம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு அவர் ஒரு பெண் என்பது மட்டுமே”, என்றவர் ஹிலரி கிளிண்டன் மட்டும் ஆணாக இருந்தால் அவருக்கு கிடைத்திருக்கும் வாக்குகளில் வெறும் ஐந்து சதவீத வாக்குகள் கூட அவருக்கு கிடைக்காது என்று விமர்சித்திருக்கிறார்.
கட்சிகளுக்கான அதிபர் வேட்பாளர் தேர்தலில் பெண் என்பதனாலேயே ஹிலரி இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் ஆனால் அமெரிக்கப் பெண்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்பது தனக்கு கிடைத்திருக்கும் பெண்களின் ஏகோபித்த ஆதரவே அதற்கான சிறந்த சாட்சி என்றும் ட்ரம்ப் கூறினார்.
முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனோ பெண்ணியத்தை தான் முதன்மைப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். ஆண்களுக்கு சமமான சம்பளமும் சுகாதார வசதிகளும் பெண்களுக்கும் தேவை என்று போராடியதன் மூலம் அதை செய்தேன் என்றார்.
ஐந்து மாகாணங்களில் நான்கில் ஹிலரி கிளிண்டன் பெர்னீ சாண்டர்ஸை தோற்கடித்ததன் மூலம் தனக்கும் அவருக்குமான இடைவெளியை மேலும் பெரிய அளவில் அதிகப்படுத்தினார். ஜனநாயகக்கட்சியினர் அனைவரும் தன் பின்னால் அணிதிரள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்
“நீங்கள் என் ஆதரவாளரா அல்லது சாண்டர்ஸ் ஆதரவாளரா என்பது முக்கியமல்ல. எங்களைப் பிரிக்கும் விஷயங்களைவிட ஒற்றுமைப்படுத்தும் விஷயங்களே அதிகம்”, என்றார் கிளிண்டன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் தேர்வு என்பது ஏறக்குறைய முடிந்து போன ஒன்று. குடியரசுக்கட்சி வேப்டாளர் தேர்தலைப்பற்றி அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் டொனால்ட் ட்ரம்பின் இன்றைய வெற்றிகள் அவரது நியமனத்தின் சாத்தியத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply