சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு

jeyaமதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை முந்தைய திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அதுவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரே முறைகேடுகளில் ஈடுபட்டனர். கிரானைட் கொள்ளை தொடர்பாக 2009-ம் ஆண்டே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.

முதல்-அமைச்சர் கருணாநிதியிடமே கூட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் கிரானைட் கொள்ளையர்கள் மீது அன்றைய தி.மு.க. அரசோ, அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியோ ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்றால் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கொள்ளைக்கே அவர்கள் காரணமாக இருந்ததால் தான், கிரானைட் கொள்ளையர்களை விட்டு விட்டு அது பற்றி தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி.

 

2011-ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறிக்கை பெறப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டு 2012-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்தார். அதில், ஒலிம்பஸ் கிரானைட் உள்ளிட்ட மூன்று குவாரிகளை மட்டும் ஆய்வு செய்ததாகவும், அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், மதுரை மாவட்டம் முழுவதும் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் கருணாநிதியின் பேரன்.

 

கருணாநிதி ஏன் கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இப்போது புரிகிறதா? எனது ஆட்சியில், கிரானைட் முறைகேடுகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிமையாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் வெட்டியெடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தி.மு.க.வினர் தங்களது திண்ணைப் பிரச்சார துண்டு பிரசுரத்தில் கிரானைட்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என பிரசாரம் செய்கிறார்கள்.

 

மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பது 2012-ம் ஆண்டு முதலே எனது அரசால் நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தி.மு.க.வினர் தான் என்பது புரிந்து விட்டதா?

 

காங்கிரஸ்-தி.மு.க. நடத்திய மத்திய கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழல்; 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்; மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுவசதியில் ஊழல்; காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என விளையாட்டிலே கூட விளையாடிய கூட்டணி தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பதை மறவாதீர்கள்.

 

முன்பு ஆட்சியில் இருந்த போது சுருட்டியது போதாதென்று மேலும் சுருட்ட வாய்ப்பு கேட்டு உங்களை தேடி வாக்கு கேட்க தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் வருவார்கள்.

 

மறுபடியும் உங்கள் வாக்குகளைப் பெற்று கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களை தேடி அதே கொள்ளைக் கூட்டம் வரும். அவர்களுக்கு, அந்த தி.மு.க-வுக்கு, இந்தத் தேர்தலில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, பலமான அடியை நீங்கள் கொடுத்தால் தான் அந்தக் கொள்ளைக் கூட்டம் நிரந்தரமாக ஒழியும்.

 

தி.மு.க.-காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணியையும் ஒழிக்க வேண்டும். அதற்கு 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பலமான அடியை விட, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுத்து, அந்தக் கூட்டணியை, கொள்ளைக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தி.மு.க.-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

 

சட்டம்-ஒழுங்கைப் பற்றி ஒரு சில கருத்துகளை இப்பொழுது தெரிவிக்க விரும்புகிறேன். 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சி ஒரு அராஜக ஆட்சி.

 

தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் என்று தான் நீங்கள் 2011-ம் ஆண்டில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தினீர்கள். உங்களது எண்ணப்படியே இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. யாரும் எந்தவித அச்ச உணர்வும் இன்றி வாழ முடிகிறது. நடமாட முடிகிறது. தங்களது சொத்துகளை அனுபவிக்க முடிகிறது. அன்றைய தி.மு.க. அரசும், தி.மு.க.-வினரும் காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களை அச்சுறுத்திய காரணத்தினால் தான் சட்டம்-ஒழுங்கு அப்போது சீர்குலைந்திருந்தது. அதை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது நான் தான் இன்று எந்த அரசியல்வாதியும் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பணிகளில் தலையீடு செய்ய முடியாது. எனவே தான் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் குறைந்து வருகின்றன. அன்றைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, சமூக விரோத கும்பல் உதவியுடன் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை அபகரித்தனர். 2011-ம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்ற பின், நில அபகரிப்பு புகார்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்; நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

 

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3,264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர். 3,678 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,193 ஏக்கர் நிலம் மற்றும் 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி வீட்டுமனைகள் நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

1,084 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் 3 வழக்குகளில் எதிரிகள் தண்டனை பெற்றுள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு நிலைமை சீரமைக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் குற்றங்களும் தற்போது குறைந்துள்ளன.

 

கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொலைகள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைகள், களவு வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள் என பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் குறைந்துள்ளன.

 

மதுவிலக்கைப் பற்றி இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க.வின் கருத்தினை இப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

 

எனது தலைமையிலான அ.தி.மு.க., எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.

 

முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

 

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply