பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்கள்: மறுபரிசீலனை செய்ய ஒபாமாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

jet usaபாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவின் ஒபாமா அரசு முடிவு செய்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது. இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்தார். ஆனாலும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி, பாகிஸ்தானுக்கு அந்த விமானங்களை விற்பனை செய்வதற்கு ஒபாமா அரசு முடிவு செய்தது.

 

இது குறித்து முறைப்படி, அமெரிக்க அரசு அறிவிக்கையும் வெளியிட்டு விட்டது. இதற்கு பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய விலை 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,620 கோடி) ஆகும்.

 

ஆனாலும் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்யும் ஒபாமா அரசின் முடிவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த முடிவுக்கு அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழு கூட்டம், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

 

இந்த கூட்டத்தில் குடியரசு கட்சி எம்.பி., மேத் சால்மன் பேசுகையில், “பாகிஸ்தானுக்கு எப்-16 ரக விமானங்கள் விற்பனை செய்வதற்கு முடிவு எடுத்துள்ள தருணம், என்னையும், பிற எம்.பி.க்களையும் கேள்வி கேட்க வைத்துள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த எப்-16 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுவதை விட இந்தியா மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த முடியும். எனவே இந்த முடிவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

 

இதேபோன்று ஜனநாயக கட்சி எம்.பி., பிராட் ஷெர்மேன் கூறும்போது, “ பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிப்பது அல்லது எப்-16 ரக போர் விமானங்கள் விற்பனை செய்வது எங்களுக்கு கவலை அளிக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்குத் தானே தவிர, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அல்ல” என்று கூறினார்.

 

இந்த கூட்டத்தில் ஒபாமா அரசின் சார்பில் பங்கேற்ற சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஆல்சனிடம் சல்மான் கூறுகையில், “ இப்போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போர் விமானங்கள் விற்பனை செய்வதின் நோக்கம் என்ன, இது அமெரிக்காவுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்கும்?” எனவும் கேள்வி எழுப்பினார்.

 

அது மட்டுமல்ல, “அமெரிக்க தாக்குதல்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா திரளான ராணுவ உதவிகள் செய்துள்ளது. ஆனால் அங்கு தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் இயங்கி வரத்தான் செய்கின்றன. இந்தியாவில் தாக்குதல் நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் உபகரணம் போல பயன்படுத்துகிறது”எனவும் குற்றம் சாட்டினார்.

 

பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழு தலைவர் இலியானா ரோஸ் லேட்டினனும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போர் விமானங்கள் விற்பனை செய்வதற்கு கவலை தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply