போராளிகளின் கைது: நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட கூட்டமைப்பு தீர்மானம்

tnaபுனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுகின்றமை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கடந்த மாச் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பாக வடக்கு, கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் பலர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது குடும்பங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக வட பகுதியில் திடீர் கைதுகள் மற்றும் கடத்தல்கள் அதிகரித்துள்ளமையினால் நல்லாட்சி அரசாங்கத்தின்மீது தாம் கொண்ட நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே முன்னாள் போராளிகள் உள்ளிட்ட இளைஞர்களின் கைதுகள் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, தற்கொலை அங்கி தொடர்பாகவே ராம், நகுலன் உள்ளிட்ட தளபதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் காரணங்களின்றி புதன்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply