சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது
பாராளுமன்றத்தினுள் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க முடியாது என மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். நிலையியற் கட்டளைக்கு முரணாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை பக்கச்சார்பானது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நிலையியற் கட்டளையின் பிரகாரம் சம்பவம் நடந்த உடனேயே சபாநாயகர் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும். தனது முடிவை அதேதினம் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால் சம்பவம் நடைபெற்று 48 மணித்தியால நேரத்திலேயே சபாநாயகரின் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது சட்டவிரோதமானது என்றார். ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்ததாவது, இது தொடர்பில் விசாரணை நடத்திய குழு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலம் பெற்றதா? சகலரும் உடன்படக்கூடியவாறு விசாரணை முன்னெடுக்கப்பட்டதா என்று அறிய வேண்டும் என்றார்.
ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதாவது, வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சபையில் இரத்தம் சிந்தல்கள் பல இடம்பெற்றுள்ளன. பாலித தெவரப்பெருமவே முதலில் தாக்குதல் நடத்தியிருந்தார் என்றார்.
சந்திரசிறி கஜதீர எம்.பி குறிப்பிட்டதாவது, பிரதமரை அவமதிக்கும் வகையில் பேசியதாக பந்துல, தினேஷ் ஆகியோர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. உங்களது கருத்து எதுவுமின்றி இவ்வாறு குற்றஞ்சாட்ட முடியாது என்றார்.
விமல் வீரவன்ச எம்.பி குறிப்பிடுகையில், பிரதி சபாநாயகருக்குஎதிராக தினேஷ் குணவர்தன எம்.பி வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலே அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திலங்க சுமதிபாலவுக்கு ஹோமாகம சு.க அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்துள்ளார் என்றார்.
ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சிசிற ஜயக்கொடி எம்.பி கூறுகையில், 1983முதல் தினேஷ் குணவர்தன எம்.பியாக இருந்து வருகிறார். விசாரணை அறிக்கையில் அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்துபவர்கள் நடுநிலையானவர்களாக இல்லாமல் விசாரணை அறிக்கை எப்படி நடுநிலையாக இருக்க முடியும். ஐம்பது ஐ.ம.சு.மு எம்பிக்கள் திலங்க சுமதிபாலவின் பிரதி சபாநாயகர் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply