ஆயிரம் முறை யோசித்து அளித்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: ஜெயலலிதா உறுதி

jeyaஒரு வாக்குறுதியை கொடுக்கும் முன்னர் ஆயிரம் தடவை யோசிப்பேன் என்றும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரசாரத்தை தொடங்கினார். 

 

தொடர்ந்து, விருத்தாசலம், அருப்புக்கோட்டை, சேலம், திருச்சி, கோவை, பெருந்துறை ஆகிய நகரங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நேற்று மாலை தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 

இதற்காக, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் அ.தி.மு.க. மற்ற கட்சிகளைப் பார்த்து பயந்து போய் தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை என்று கூறி வந்தவர்கள் தான் இவர்கள். தற்போது அறிக்கை வெளியிட்டவுடன் மீண்டும் அதே கருத்தை தெரிவிக்கிறார்கள்.

 

தி.மு.க.வைப் பொறுத்தவரை அவர்களது ஒரே குறிக்கோள் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விட வேண்டும் என்பதுதான். எனவே தான், அவர்கள் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்ப முயற்சித்து, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஏதேதோ பேசி வருகிறார்கள்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, மக்களை ஏமாற்றும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது தனயனோ, இது தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என சொல்லி உள்ளார். இந்த குழப்பத்தை முதலில் தந்தையும், தனயனும், தங்களுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிறஎதிர்க்கட்சிகளும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் போல மக்களை ஏமாற்றுவது தான் என தெரிவித்து வருகின்றனர்.

 

என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஏன் தற்போது வெளியிடப்பட்டது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். தி.மு.க. உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு தாங்கள் செய்த சாதனைகளாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனவே தான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரிவித்துதான் அவர்கள் பிரசாரத்தை மேற்கொள்ள முடியும்.

 

ஆனால் எங்களைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகள், நிறைவேற்றியுள்ள மக்கள்நல திட்டங்கள் ஏராளம் ஏராளம். நாங்கள் எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்யும் போது, முதலில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? நாங்கள் என்ன சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம்; மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொடுத்துள்ளோம்; முந்தைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றியுள்ளோம்; அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன பணிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதையெல்லாம் மக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதால் தான், நான் தேர்தல் பிரசாரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே எங்களது தேர்தல் அறிக்கையை நான் வெளியிடவில்லை.

 

தற்போது உங்கள் பேராதரவால் நாங்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வோம்; என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தெரிவிக்கும் விதத்தில் எங்களது தேர்தல் அறிக்கையை 5௫௨016 அன்று நான் வெளியிட்டேன். தற்போது நாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் சிலவற்றை வழங்குவோம் என்ற உறுதியை அளித்திருக்கிறோம் என்று பிற கட்சிகள் சொல்வதை நான் மறுக்கவில்லை. பிற கட்சிகள் அதற்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.

 

எங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியமே.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லி வந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும் குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மக்களை ஏமாற்றப்பார்க்கிறார். இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது. அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று திரும்பத்திரும்பக் கூக்குரலிடுகின்றனர்.

 

எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள்தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால் தான், நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

 

மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத செயல்களின் உச்சத்திற்கே சென்று இந்த தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே தி.மு.க. சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

தற்போதுள்ள நலத்திட்டங்கள் நீடித்திட, அமைதி வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட, வருகின்ற 16௫௨016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கும், எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

 

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply